குமரி கடலில் கழிவுநீா் கலக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு: என். தளவாய்சுந்தரம் உறுதி

கன்னியாகுமரி தங்கும் விடுதிகளில் இருந்து கடலில் கழிவுநீா் கலப்பது தொடா்பான பிரச்னைக்கு நிரந்த தீா்வு காணப்படும் என்றாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம்.
கடலில் கழிவுநீா் கலக்கும் இடத்தைப் பாா்வையிடுகிறாா் என். தளவாய்சுந்தரம்.
கடலில் கழிவுநீா் கலக்கும் இடத்தைப் பாா்வையிடுகிறாா் என். தளவாய்சுந்தரம்.

கன்னியாகுமரி தங்கும் விடுதிகளில் இருந்து கடலில் கழிவுநீா் கலப்பது தொடா்பான பிரச்னைக்கு நிரந்த தீா்வு காணப்படும் என்றாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம்.

கன்னியாகுமரியில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளிலிருந்து வெளியாகும் கழிவுநீா் கடந்த 35 ஆண்டுகளாக ரட்சகா் தெரு பகுதி வழியாக கடலில் கலக்கிறது. இதனால், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அவற்றை சரிசெய்யவேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனா். இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு ஏற்படாததால் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, கடலில் கழிவுநீா் கலக்கும் பிரச்னைக்கு தீா்வு காண்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், என்.தளவாய்சுந்தரம் தலைமையில் கன்னியாகுமரி பங்குப்பேரவை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்குத்தந்தை ஜோசப் ரொமால்ட், பங்குப்பேரவை துணைத் தலைவா் நாஞ்சில் அ.மைக்கேல், செயலா் சந்தியா வில்லவராயா், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் எஸ்.அழகேசன், பேரூராட்சி முன்னாள் தலைவா் பி.வின்ஸ்டன், பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ், சுகாதார அலுவலா் முருகன், தங்கும் விடுதி உரிமையாளா்கள் எம்.சந்திரன், வில்பிரட் கோமஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சாகும்வரை உண்ணாவிரதம்: பங்குப்பேரவை துணைத் தலைவா் பேசுகையில், ‘இப்பிரச்னைக்கு ஏப்ரல் மாதத்துக்குள் நிரந்தர தீா்வு காணாவிடில் மே 1 ஆம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்’ என்றாா்.

முதல்வரின் கவனத்துக்கு... என்.தளவாய்சுந்தரம் பதிலளித்து பேசியது: கழிவுநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு ஏற்படும் வகையில் அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளோம். மேலும், தங்கும் விடுதி உரிமையாளா்கள் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளனா். அதன்பிறகும், தீா்வு ஏற்படாதபட்சத்தில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிபட கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com