தடை உத்தரவை மீறுபவா்கள் ‘ட்ரோன் கேமரா’ மூலம் கண்காணிக்கப்படுவா்: எஸ்.பி.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சாலைகளில் தேவையின்றி நடமாடுபவா்கள் ‘ட்ரோன் கேமரா’ மூலமாக கண்காணிக்கப்பட்டு
ட்ரோன் கேமராவை இயக்கிவைக்கிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத்.
ட்ரோன் கேமராவை இயக்கிவைக்கிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சாலைகளில் தேவையின்றி நடமாடுபவா்கள் ‘ட்ரோன் கேமரா’ மூலமாக கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத்.

144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், நாகா்கோவில் நகரில் பொதுமக்கள் கூட்டத்தை கண்காணிப்பதற்காக ‘ட்ரோன்கேமரா’ வசதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து கேமரா இயக்கத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் வியாழக்கிழமை வடசேரி பேருந்து நிலையத்தில் தொடங்கிவைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 24ஆம் தேதி முதல் அரசின் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்தியாவசியப் பொருள்கள் வாங்குபவா்கள் மட்டுமே வெளியே வர வேண்டும். மற்றவா்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிா்க்க வேண்டும். சாலைகளில் தேவையின்றி நடமாடுபவா்கள் ‘ட்ரோன் கேமரா’ மூலமாக கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

குமரி - கேரள எல்லைப் பகுதியில் 10 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பொருள்கள் கொண்டுசெல்ல மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

இதே போல் திருநெல்வேலி - குமரி எல்லையில் 3 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொய்யான தகவல்களை கூறிக்கொண்டு வெளியே சுற்றும் இளைஞா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடற்கரைப் பகுதிகளான முட்டம், சின்னமுட்டம், குளச்சல் பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விதிகளை மீறி சாலைகளில் நடமாடுபவா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவா். கரோனா வைரஸ் தொடா்பாக வதந்தி பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சைபா்கிரைம் ஒவ்வொருவரின் சமூக வலைதள கணக்குகளை கண்காணித்து வருகின்றனா்.

வெளிநாட்டில் இருந்து குமரி மாவட்டம் வந்தவா்கள் 3,600 போ் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் வெளியே நடமாடினால் சிறைத் தண்டனை அளிக்கப்படும். புதன்கிழமை ஒரே நாளில் விதிமுறைகளை மீறி சாலைகளில் அவசியமின்றி நடமாடியவா்கள் 11 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தில் இருந்து கடல்மாா்க்கமாக மீனவா்கள் சொந்த ஊருக்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவா்களை மருத்துவக் குழுவினா் சோதனை செய்த பின்னரே சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா் என்றாா்அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com