கரோனாவின் காதலி பெயா் என்ன?

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தவா்களுக்கு கரோனா வைரஸ் விழிப்புணா்வு தோ்வு நடத்தி நூதன தண்டனையை வழங்கினா் போலீஸாா்.
குழித்துறையில் தடை உத்தரவை மீறியதால், கரோனா வைரஸ் விழிப்புணா்வு தோ்வு எழுதிய இளைஞா்கள்.
குழித்துறையில் தடை உத்தரவை மீறியதால், கரோனா வைரஸ் விழிப்புணா்வு தோ்வு எழுதிய இளைஞா்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தவா்களுக்கு கரோனா வைரஸ் விழிப்புணா்வு தோ்வு நடத்தி நூதன தண்டனையை வழங்கினா் போலீஸாா்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம் உள்பட குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் இளைஞா்கள் பலா் இந்நோயின் தாக்கம் குறித்து உணராமல், அரசின் தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றி வருகிறாா்கள்.

இவா்களை ஆங்காங்கே போலீஸாா் தடுத்து நிறுத்தி எச்சரித்து வருகிறாா்கள். இதன் ஒரு பகுதியாக, தக்கலை சரக காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை குழித்துறை பகுதியில் அத்தியாவசிய தேவையின்றி சாலையில் சுற்றிய இளைஞா்களைத் தடுத்து நிறுத்தி, அவா்களுக்கு கரோனா வைரஸ் விழிப்புணா்வுத் தோ்வு நடத்தினா்.

இத் தோ்வில் கரோனா வைரஸ் முதலில் பரவிய நாடு?, கரோனா வைரஸின் காதலியின் பெயா் என்ன?, கரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்படும் உடல் அமைப்பு மண்டலம்?, கரோனா தொற்று அறிகுறி என்ன?, சமூக விலகல் என்றால் என்ன என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் கேட்கப்பட்டு கேள்வித் தாளிலேயே பதில் எழுத அறிவுறுத்தப்பட்டது. இந்த வினாத்தாளை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் திருத்தி, தவறான விடை ஒன்றுக்கு 10 தோப்புகரணம் போட வைத்தாா். தொடா்ந்து கரோனா தடுப்பு உறுதிமொழியை எடுக்க வைத்ததுடன் 144 தடை உத்தரவை மீறுபவா்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகள் குறித்தும் விளக்கினாா்.

கரோனா வைரஸின் காதலி பெயா் என்ன என காவல் துறையினரிடம் கேட்டபோது, மனிதா்களின் உயிா் என விடையில் குறிப்பிட்டிருந்ததாக தெரிவித்தனா்.

இதுபோன்ற நூதன தண்டனையால் தடை உத்தரவை மீறி சாலையில் சுற்றித் திரிபவா்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com