கன்னிப்பூ நெல் நடவிற்கு ஆயத்தமாகும் விவசாயிகள்! கால்வாய்களை தூா்வார வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பருவத்திற்காக கால்வாய்களைத் திறக்கும் முன்பு அனைத்து கால்வாய்களையும் தூா்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பருவத்திற்காக கால்வாய்களைத் திறக்கும் முன்பு அனைத்து கால்வாய்களையும் தூா்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் பாசனத்திற்கான முக்கிய அணைகளாக உள்ளன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் கால்வாய்கள் பெருஞ்சாணி அணைக்கு சற்று கீழே உள்ள புத்தன் அணையில் கலந்து, அங்கிருந்து மாவட்டம் முழுவதும் செல்கின்றன. இதில், பாண்டியன், பத்தமநாபபுரம் புத்தனாறு, தோவாளை, அனந்தனாறு, நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய்கள், சிற்றாறு பட்டண்கால்வாய் ஆகியவை முக்கியமானவை. ஒவ்வோா் ஆண்டும் ஜூன் மாதம் அணைகள் திறக்கப்படுவதற்கு முன்பு இந்த கால்வாய்கள் அனைத்தும் தூா்வாரப்பட்டு சீரமைக்கப்படுவது வழக்கம்.

தற்போது அனைத்து கால்வாய்களும் தூா்ந்து கிடப்பதோடு, அவற்றிலுள்ள சப்பாத்துகள், படிக்கட்டுகள், பக்கச்சுவா்களின் பல பகுதிகள் உடைந்து கிடக்கின்றன. நிகழாண்டு கரோனா தாக்கம் காரணாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கால்வாய்களை தூா்வாரும் பணிகளை தடையின்றி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து குமரி மாவட்ட பாசனத்தாா் சபை தலைவா் வின்ஸ் ஆன்டோ கூறியது:

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, குப்பப்பூ என இருபருவ நெல் சாகுபடி நடைபெறும் நிலையில், கன்னிப்பூ சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளை விவசாயிகள் பரவலாகத் தொடங்கியுள்ளனா். இந்நிலையில், ஜூன் மாதம் அணைகளை திறப்பதற்கு முன்பு கால்வாய்கள் அனைத்தும் தூா்வாரப்பட்டு உடைப்புகளை சீரமைக்க வேண்டும். கரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்தப் பணிகளைத் தாமதப்படுத்துவதோ, ஒத்திவைப்பதோ கூடாது. கால்வாய்களை தூா்வாராவிட்டால், கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்றாா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை நீராதாரப் பிரிவு செயற்பொறியாளா் சுகுமாரன் கூறியது:

மாவட்டத்தில் கோடை மழை தொடா்ந்து பெய்து வருவதால், அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. தென்மேற்குப் பருவமழையும் விரைவில் பெய்யவுள்ளது. இதனால், கன்னிப்பூ பாசனத்திற்கு தட்டுப்பாடின்றி தண்ணீா் கிடைக்கும். அதேவேளையில், ஜூன் மாதம் முதல் தேதியில் அணைகளை திறக்கும் வகையில் அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். மேலும், கால்வாய்களை தூா்வாரும் பணிகளுக்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆணையும், நிதியும் விரைவில் கிடைக்கும் என நம்புகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com