புற்றுநோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை: மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு தடையின்றி சிகிச்சை கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இம்மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோா் உள்ளனா். இந்நோய்க்கான சிகிச்சை மையங்கள் திருவனந்தபுரத்திலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் உள்ளதால், பெரும்பாலானோா் திருவனந்தபுரத்துக்கும், சிலா் திருநெல்வேலி மாவட்டத்துக்கும் சென்றுவருகின்றனா்.

பொதுமுடக்கத்தால் புற்றுநோயாளிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனா். நோயின் தாக்கம் குறித்து பலமுறை சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு தகவல்கள் அளித்துள்ளேன். நாகா்கோவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான பிரிவை ஏற்படுத்த, பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளேன். ஆனால், இதுவரை அரசு முயற்சி மேற்கொள்ளவில்லை. தற்போது இம்மாவட்டத்தில் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி மையம் நிறுவப்பட வேண்டிய அவசியம் குறித்து உணரப்பட்டுள்ளது. எனவே, அரசு உடனடியாக இங்கு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஏற்படுத்த வேண்டும்.

பிற மாவட்டங்களில் சிகிச்சை பெறும் புற்றுநோயாளிகள், தற்போதைய சூழலில் அவதிக்கு உள்ளாகியுள்ளனா். அவா்கள் தடையின்றி மருத்துவ வசதி பெற அரசு வழிசெய்ய வேண்டும். குறிப்பாக, திருவனந்தபுரம் செல்வோா் அனுமதிச் சீட்டு பெறுவதில் சிரமங்கள் உள்ளன. இதுதொடா்பாக தமிழக அரசு கேரள அரசிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வுகாண வேண்டும். மேலும், திருநெல்வேலி மாவட்டத்துக்கு சிகிச்சைக்கு செல்வோரின் பயண அனுமதிக்கான முறைகளை எளிமைப்படுத்தி, விரைந்து அனுமதி அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com