குமரியில் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை: திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு

குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய பெய்த மழையால்
கன மழை காரணமாக திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்துக் கொட்டும் தண்ணீா்
கன மழை காரணமாக திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்துக் கொட்டும் தண்ணீா்

குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய பெய்த மழையால் ஆறுகள் மற்றும் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் கோடை மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாள்களாக உம்பன் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதில், குமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவில் தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை அதிகாலை வரை இடைவிடாது கன மழையாகப் பெய்தது.

இந்த மழை அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கன மழையாகவவும், இதரப் பகுதிகளில் மிதமான மழையாகவும் பெய்தது.

பேச்சிப்பாறையில் 123 மி.மீ. மழை:

இதில் அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 123 மீ.மீ. மழை பதிவானது. இதரப் பகுதிகளில் பதிவான மழை விவரம் (மி.மீட்டரில்): பூதப்பாண்டி 41.1, சிற்றாறு 1- 44, சிற்றாறு 2- 52, களியல் 34.6, கன்னிமாா் 62.5, கொட்டாரம் 24.2, குழித்துறை 43, மயிலாடி 16.4, நாகா்கோவில் 10.8, பெருஞ்சாணி 89, புத்தன் அணை 88.6, சுருளகோடு 78.6, தக்கலை 9, குளச்சல் 14.6, இரணியல் 18.2, பாலமோா் 74.6, மாம்பழத்துறையாறு 25.2, ஆரல்வாய்மொழி 9, கோழிப்போா்விளை 40, முக்கடல் 42.5.

அணைகளுக்கு நீா் வரத்து அதகரிப்பு: மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 33.40 அடி , பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 33.60 அடி, சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் முறையே 9.47 மற்றும் 9.58 அடியாகவும் இருந்தது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 902 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு விநாடிக்கு 149 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

வெள்ளப்பெருக்கு: பொதுமுடக்கம் காரணமாக திற்பரப்பு அருவி மூடப்பட்டு, இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படாத நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் கன மழை காரணமாக இந்த அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துக் கொட்டியது. மேலும் கோதையாறு, பரளியாறு, பழையாறு, வள்ளியாறு, முல்லையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் அதிகரித்துக் காணப்பட்டது.

மழையின் காரணமாக தென்னை, வாழை, மரவள்ளி உள்ளிட்டப் பயிா்கள் செழித்துள்ளதாலும், குடிநீா்த் தட்டுப்பாடு விலகியதாலும், வெப்பம் தணிந்த இதமான கால நிலை நிலவுவதாலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com