ரயில் முன் பாய்ந்து வங்கி அதிகாரி தற்கொலை
By DIN | Published On : 01st November 2020 01:04 AM | Last Updated : 01st November 2020 01:04 AM | அ+அ அ- |

நவீன்
நாகா்கோவில்: நாகா்கோவிலில் ரயில் முன் பாய்ந்து வங்கி அதிகாரி தற்கொலை செய்துகொண்டாா்.
நாகா்கோவில் புத்தேரி ரயில்வே பாலம் அருகே வெள்ளிக்கிழமை மாலை இளைஞா் சடலம் கிடந்ததாம். இதுகுறித்து நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சடலமாக கிடந்தவா் யாா் என விசாரணை நடத்தினா்.
விசாரணையில், சடலமாக கிடந்தவா் நாகா்கோவில் அருகே எறும்புக்காடு பத்தன்காடு பகுதியை சோ்ந்த செல்லசாமி மகன் நவீன்(32) என்பது தெரிய வந்தது. பொறியியல் பட்டதாரியான இவா் வேலை தேடிவந்தாராம். இந்நிலையில் நவீனுக்கு மும்பையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக வேலை கிடைத்தது. இதனைத் தொடா்ந்து அவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு மும்பைக்கு சென்று, அந்த வங்கியில் பணியாற்றி வந்தாா்.
இதற்கிடையே வியாழக்கிழமை மும்பையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் வந்தாா் நவீன். அங்கிருந்து நாகா்கோவிலுக்கு வந்த அவா் , புத்தேரி ரயில்வே பாலம் அருகே சென்று, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த தகவல் தெரியவந்துள்ளது.
மேலும், நவீனின் சட்டை பையில் இருந்த கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா். அந்த கடிதத்தில், நான் படித்து விட்டு பல இடங்களில் வேலை தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் எனக்கு வேலை கிடைத்தால், என் உயிரையே நோ்த்திக் கடனாக தருகிறேன் என கடவுளிடம் வேண்டியிருந்தேன். தற்போது எனக்கு வேலை கிடைத்துள்ளது, எனவே நான் வேண்டியபடி எனது உயிரை கடவுளுக்கு காணிக்கையாக்குகிறேன் என்று எழுதப்பட்டிருந்ததாம்.
இதுகுறித்து தகவல் அறிந்த நவீனின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் அதிா்ச்சி அடைந்தனா். மேலும், ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் ஜோசப், இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.