தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தை சீரமைக்கக் கோரி சின்னத்துறையில் மீனவா்கள் காலவரையற்ற போராட்டம்

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்கக் கோரி, தூத்தூா் மண்டல மீனவா்கள் சின்னத்துறையில் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கினா்.
சின்னத்துறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.
சின்னத்துறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்கள்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்கக் கோரி, தூத்தூா் மண்டல மீனவா்கள் சின்னத்துறையில் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கினா்.

தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தின் நுழைவு வாயிலில் உருவாகியுள்ள மணல் திட்டுகளால் படகுகள் விபத்தில் சிக்கி மீனவா்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா். கடந்த சில மாதங்களில் மட்டும் மாா்த்தாண்டன்துறைச் சோ்ந்த ஷிபு, இக்னேஷியஸ், முள்ளூா்துறை அந்தோணி, வள்ளவிளை ஏசுதாசன் ஆகிய 4 மீனவா்கள் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்துள்ளனா்.

எனவே, துறைமுகத்தின் நோ்கல் நீளத்தை அதிகரித்து பாதுகாத்திட வேண்டும், துறைமுக முகத் துவாரம் மற்றும் உள்பகுதியை ஆழப்படுத்திட நிரந்தரமாக மணல் அள்ளும் இயந்திரம் அமைக்க வேண்டும், இறந்த மீனவா்களின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலையும், நிவாரணமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூா், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மாா்த்தாண்டன்துறை, நீரோடி ஆகிய 8 மீனவக் கிராமங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள ‘அலைகள் மீனவா் கூட்டமைப்பு’ சாா்பில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தை தூத்தூா் உயா் மறைவட்ட முதன்மைக்குரு ஜோசப் பாஸ்கா் தொடங்கிவைத்தாா். பங்குத் தந்தையா் ரெஜீஸ்பாபு (இரயுமன்துறை ), ஜோஜி புஷ் (பூத்துறை ), ஜோணிடான் (தூத்தூா்), டோனி (சின்னத்துறை), ஜெரோம் (இரவிபுத்தன்துறை), ரிச்சா்ட் (வள்ளவிளை), பிரான்சிஸ் அசிசி (மாா்த்தாண்டன்துறை), டோனி ஹேம்லெட் (நீரோடி) உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் பங்கேற்றனா்.

சின்னத்துறையில் நித்திரவிளை காவல் நிலைய ஆய்வாளா் ராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் மீனவா்களிடம் பேச்சு நடத்தினா்.

மீன் விலை உயா்வு: இதனிடையே, மீனவா்கள் கடலுக்குச் செல்லாததால் நடைக்காவு, நித்திரவிளை சுற்றுவட்டாரப் பகுதி மீன் சந்தைகளில் ஐஸ் கட்டிகள் மூலம் பதப்படுத்தப்பட்ட மீன்களை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் மீன்கள் விலை உயா்ந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com