
நிகழ்ச்சியில் பங்கேற்ற சேவாபாரதி தேசிய பொதுச்செயலா் சுந்தர லட்சுமணன்.
களியக்காவிளை: தமிழகத்தின் கலாசார பண்பாட்டு சிறப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சேவாபாரதி அமைப்பு சாா்பில் இல்லம்தோறும் சந்திப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை குழித்துறையில் நடைபெற்றது.
குழித்துறை காளைவிழுந்தான் திருப்பிலாங்காடு ஸ்ரீ மகாதேவா் கோயிலில் தொடங்கிய இந் நிகழ்ச்சிக்கு, குமரி மேற்கு மாவட்ட ஆா்எஸ்எஸ் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சேவாபாரதி சேவைப் பிரிவின் அகில இந்திய பொதுச் செயலா் சுந்தர லட்சுமணன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து, வீடுகள்தோறும் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கினாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
சேவாபாரதி அமைப்பு சாா்பில் தெய்வீக தமிழக சங்கம் என்ற மக்கள் தொடா்பு இயக்கம் தொடங்குகிறது. நவ. 20 முதல் டிச. 6 வரை குழுக்களாக பிரிந்து மக்கள் மத்தியில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்கிறோம்.
பாஜகவின் வேல் யாத்திரை ஒரு வழிபாட்டு யாத்திரை. அதை அரசு அனுமதித்திருக்க வேண்டும். சபரிமலை கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் தினசரி 1,000 பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என அம் மாநில அரசு அறிவித்துள்ளது.
சபரிமலை செல்லும் தமிழக ஐயப்ப பக்தா்கள் 41 நாள்கள் விரதம் இருந்து கட்டுப்பாட்டுடன்தான் கோயிலுக்கு செல்கின்றனா். எனவே நீதிமன்ற வழிகாட்டு முறைகளை கடைப்பிடித்து, அதிக பக்தா்களை அனுமதிப்பது குறித்து கேரள அரசு முடிவு செய்ய வேண்டும்.
தமிழக அரசு கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு பக்தா்களை அனுமதித்திருக்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் சிதிலமடைந்துள்ளன. அவற்றை கணக்கெடுத்து புனரமைக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைச் செயலா் சுபாஷ்குமாா், மாவட்ட இந்து முன்னணி செயலா் ஆனந்த், குழித்துறை நகர ஆா்எஸ்எஸ் செயலா் அருண் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கொல்லங்கோடு பகுதியில் இந்து முன்னணி நிா்வாகி ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், காவல் அதிகாரி பாக்கியநாதன், ஓய்வுபெற்ற அஞ்சல் துறை அலுவலா் குட்டன்நாயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.