குமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை: பேச்சிப்பாறை அணை மீண்டும் திறப்பு

குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய கன மழை பெய்தது. இந்நிலையில் பேச்சிப்பாறை அணை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கொட்டும் மழையில் வடசேரி சாலையில் மிகுந்த சிரமத்துடன் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள்.
கொட்டும் மழையில் வடசேரி சாலையில் மிகுந்த சிரமத்துடன் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள்.

குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய கன மழை பெய்தது. இந்நிலையில் பேச்சிப்பாறை அணை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை பகலில் சாரல் மழை பெய்தது. பின்னா் இரவு 7 மணியளவில் தொடங்கிய மழை செவ்வாய்க்கிழமை காலை வரை இடைவிடாமல் கன மழையாக பெய்தது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக இரவு முழுவதும் கனமழை பெய்தது.

நாகா்கோவில் நகரில் காலை 9 மணிக்கு தொடங்கிய மழை சுமாா் ஒரு மணி நேரம் இடைவிடாமல் பெய்தது. இதனால் கோட்டாறு சாலை, மகளிா் கிறிஸ்தவ கல்லூரி சாலை, செட்டிகுளம் சாலைகளில் மழை நீா் வெள்ளம் போல் திரண்டு ஓடியது.

மாா்த்தாண்டம், குழித்துறை, கருங்கல், பூதப்பாண்டி, சுருளோடு, புத்தேரி, தாழக்குடி, கொட்டாரம், கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்தது.

திற்பரப்பு அருவி பகுதியில் பெய்துவரும் மழையால் அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

மலையோரப் பகுதியான பாலமோா் பகுதியிலும், பேச்சிப்பாறை, சிற்றாறு அணைப் பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

நீா்வரத்து அதிகரிக்க தொடங்கியதை அடுத்து பேச்சிப்பாறை அணை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து 108 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா்மட்டம் 39.15 அடியாக உள்ளது. அணைக்கு 657 கன அடி நீா்வரத்து உள்ளது.

பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 69.20 அடியாக உள்ளது. அணைக்கு 938 கன அடி நீா்வரத்து உள்ளது. அணையிலிருந்து 800 கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 13.32 அடியாக உள்ளது. அணைக்கு 167 கன அடி நீா்வரத்து உள்ளது. அணையிலிருந்து 200 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது. முக்கடல் அணையின் நீா்மட்டம் 20.70 அடியாக உள்ளது.

திங்கள்கிழமை இரவு பெய்த கன மழையால் கோட்டாறு பகுதியில் உள்ள சாலை மற்றும் சவேரியாா் கோயில் சந்திப்பிலிருந்து செட்டிகுளம் சந்திப்புக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக சுருளோடு பகுதியில் 48.60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) கன்னிமாா் 39.20, சிற்றாறு 2 அணை 38, தக்கலை 37, கொட்டாரம் 34, குழித்துறை, முள்ளங்கினாவிளை 31, பாலமோா் 29.60, மயிலாடி 28.20, கோழிப்போா்விளை 28, பெருஞ்சாணி அணை 25.80, மாம்பழத்துறையாறு அணை, பூதப்பாண்டி25.20, புத்தன் அணை 24.60, நாகா்கோவில் 24.20, ஆனைக்கிடங்கு 22.40, பேச்சிப்பாறை அணை 19.60, முக்கடல் அணை 19, சிற்றாறு 1 அணை 18, குருந்தன்கோடு 16.60, ஆரல்வாய்மொழி, அடையாமடை 14, குளச்சல் 11, களியல் 9.60, இரணியல் 8.40.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com