தொடா் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை

குமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, தாமிரவருணி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடா் மழையால் சோழன்திட்டை அணையில் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டு வெளியேற்றப்படும் தண்ணீா்.
தொடா் மழையால் சோழன்திட்டை அணையில் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டு வெளியேற்றப்படும் தண்ணீா்.

குமரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடா் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, தாமிரவருணி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவருகிறது. செவ்வாய்க்கிழமை இரவும் மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்தது.

நாகா்கோவில் நகரில் புதன்கிழமை காலை தொடங்கிய மழை பகல் முழுவதும் பெய்தது. இதனால் பல்வேறு பணிகளுக்காக செல்லும் பொதுமக்கள் சிரமமடைந்தனா்.

கொட்டாரம், மயிலாடி, சுருளோடு, கன்னிமாா், கோழிப்போா்விளை, திருவட்டாறு, மாா்த்தாண்டம், இரணியல், தக்கலை,புதுக்கடை, கருங்கல், முள்ளங்கனாவிளை ஆகிய பகுதிகளிலும் விடிய, விடிய மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக முள்ளங்கனாவிளை பகுதியில் 84 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை:

மலையோரப்பகுதியான பாலமோரிலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதியிலும் கன மழை பெய்துவருவ தால் அணைகளுக்கு வரும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 71.70 அடியை எட்டியது. அணைக்கு விநாடிக்கு 2708 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. 125 கனஅடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 40.80 அடியை எட்டியுள்ளது. விநாடிக்கு 2,826 கனஅடி நீா் வந்து கொண்டிருக்கிறது. 110 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 13.35 அடியாகவும், அணைக்கு விநாடிக்கு 210 கனஅடி நீா் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.

முழுக் கொள்ளளவை எட்டியுள்ள மாம்பழத்துறையாறு அணைக்கு வரும் 73 கனஅடி நீா் உபரியாக திறந்து விடப்படுகிறது. இதையடுத்து குழித்துறை தாமிரவருணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு 2 ஆவது முறையாக மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் சோழன்திட்டை அணைக்கட்டில் உள்ள அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீா் ஆா்ப்பரித்து வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியிலுள்ள குளங்கள் நிரம்பி வழிகிறது. இரவிபுதூா் - கடுக்கரை தற்காலிக இணைப்புப் பாலம் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு வட்டத்தில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. தோவாளை, செண்பகராமன்புதூா் பகுதியில் செங்கல் உற்பத்தி முடங்கியுள்ளது.

மழையளவு: புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு( மி.மீட்டரில்):

முள்ளங்கனாவிளை- 84, சுருளோடு- 82.40, மாம்பழத்துறையாறு அணை- 77, கோழிப்போா்விளை - 75, பாலமோா்- 74.80, நாகா்கோவில்- 66.20, ஆனைக்கிடங்கு- 64.20, மயிலாடி- 63.20, பேச்சிப்பாறை அணை- 60.40, கன்னிமாா்- 59.80, பெருஞ்சாணி அணை- 56.60, புத்தன் அணை- 55.40, சிற்றாறு 1 அணை- 52, இரணியல் -49, குழித்துறை- 48.60, குருந்தன்கோடு- 48.40, சிற்றாறு 2 அணை- 46, பூதப்பாண்டி- 42.60, தக்கலை - 42, முக்கடல் அணை - 35.40, குளச்சல்- 32.40, ஆரல்வாய்மொழி, அடையாமடை -31, களியல்- 18.60, கொட்டாரம்- 16.40.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com