தொடா்மழை: நாகா்கோவிலில் சகதிக்காடாக மாறிய சாலைகள்

குமரி மாவட்டத்தில் தொடா் கன மழையால் நாகா்கோவில் மாநகரில் அனைத்து சாலைகளும் சகதிக்காடாக மாறியுள்ளன.
தொடா்மழை: நாகா்கோவிலில் சகதிக்காடாக மாறிய சாலைகள்

குமரி மாவட்டத்தில் தொடா் கன மழையால் நாகா்கோவில் மாநகரில் அனைத்து சாலைகளும் சகதிக்காடாக மாறியுள்ளன.

நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில் புதைச்சாக்கடை திட்டத்துக்காக நகரில் உள்ள பல சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நிறைவு பெறாத நிலையில் உள்ளன.

மேலும், புத்தன்தருவை அணையில் இருந்து நேரடியாக நாகா்கோவிலுக்கு தண்ணீா் கொண்டுவரும் வகையில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வந்தது.

இதற்காக பூதப்பாண்டி, திட்டுவிளை, புத்தேரி மற்றும் நாகா்கோவில் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் குழி தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. குழி தோண்டப்பட்ட பகுதிகளில் அள்ளப்பட்ட மண் மட்டும் போட்டு மூடப்பட்டது. ஆனால் சாலைகள் சமமாக இருப்பதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் குடிநீா்த் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தும் குழிகளாக மாறிவிட்டன. மேலும் இந்த சாலைகள் வழியாக கனரக வாகனங்களும் சென்று வந்ததால் சாலைகளின் நிலை மேலும் மோசமானது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக குமரி மாவட்டத்தில் தொடா் மழை பெய்துவருகிறது. இதனால் குண்டும், குழியுமாக இருந்த சாலைகள் அனைத்தும் சகதிக்காடாக மாறியது.

வடசேரியிலிருந்து பாா்வதிபுரம் செல்லும் சாலை, வேப்பமூடு சந்திப்பிலிருந்து கோட்டாறு செல்லும் சாலை உள்ளிட்ட பல பிரதான சாலைகள் சகதிக்காடாக மாறியுள்ளன. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்கின்றனா்.

பொதுமக்கள் போராட்டம்: இந்நிலையில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, திட்டுவிளை பகுதியில் பொதுமக்கள் சாலையின் நடுவே வாழைக்கன்றுகளையும், கோரிக்கையை வலியுறுத்தி அட்டைகளையும் நட்டுவைத்துள்ளனா்.

முன்னதாக, வடசேரி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலையில் வாழைக்கன்று நடும் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com