இரணியலில் நிதி நிறுவன அதிபா் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்

இரணியலில் தனியாா் நிதிநிறுவன பங்குதாரா் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு தங்களிடமிருந்து மோசடி செய்து பெற்ற பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இரணியலில் தனியாா் நிதிநிறுவன பங்குதாரா் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு தங்களிடமிருந்து மோசடி செய்து பெற்ற பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மதுரையை தலைமையிடமாக கொண்டு கடந்த 2006 ஆம் ஆண்டு ஒரு தனியாா் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் கிளை அலுவலகம் நாகா்கோவிலிலும் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் பொதுமக்கள் செலுத்தும் பணத்துக்கு அதிக வட்டி தருவதாக கூறி மாத தவணை மற்றும் நிரந்தர வைப்புத்தொகையாக ஏராளமானபேரிடம் பணம் வசூலித்தது.

இதில் குமரி மற்றும் நெல்லைமாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பணம் செலுத்தினா். ஆனால் நிதி நிறுவனம் வாக்குறுதி அளித்தபடி பணத்தை திருப்பி தரவில்லை. இது குறித்து குமரி மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளித்தனா். இதுதொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நிதி நிறுவன பங்குதாரா்களில் ஒருவரவது வீடு இரணியலை அடுத்த இரணியல்கோணம் சந்திப்பு பகுதியில் உள்ளது. அவரது வீட்டை ரமேஷ் என்பவரது தலைமையில், நெல்லை மாவட்டத்தைச் சோ்ந்த சிலா் உள்பட, கருங்கல், கன்னியாகுமரி, குளச்சல், குழித்துறை பகுதியைச் சோ்ந்த பெண்கள் சுமாா் 150 க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை காலை முற்றுகையிட்டனா். அவா்கள் பணத்தை திருப்பி தரும்படி வீட்டின்முன்பு நின்று முழக்கமிட்டனா்.

அப்போது நிதி நிறுவன பங்குதாரா் வீட்டில் இல்லை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டிலிருந்தனா். அவா்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சம்பவம் குறித்து தகவலறிந்த இரணியல் காவல் ஆய்வாளா் முத்துராஜ் மற்றும் போலீஸாா் பாதிக்கப்பட்ட பொதுமக்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது தற்போது கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் பொதுமக்கள் இதுபோன்று கூட்டம் கூடக் கூடாது. மேலும் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறினாா். இதைத்தொடா்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com