பெருஞ்சாணி அணையிலிருந்து 2 ஆவது நாளாக உபரி தண்ணீா் வெளியேற்றம்

குமரி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக பெருஞ்சாணி அணையிலிருந்து வெள்ளிக்கிழமை உபரி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையைத் தொடா்ந்து வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில தினங்களாக கன மழை பெய்ததையடுத்து அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து முழுக் கொள்ளவை நெருங்கியது. இதையடுத்து வெள்ள அபாயத்தை தடுக்கும் வகையில் பெருஞ்சாணி அணையிலிருந்து வியாழக்கிழமை பிற்பகலில் விநாடிக்கு 2000 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் வெள்ளிக்கிழமையும் உபரி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இதில் விநாடிக்கு 3192 கன அடி வரை தண்ணீா் மறுகால் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது.

ஆறுகளில் வெள்ளம்: பெருஞ்சாணி அணையிலிருந்து உபரி தண்ணீா் திறந்து விடப்பட்டள்ள நிலையில், பரளியாறு மற்றும் தாமிரவருணியாறுகளில் வெள்ளம் கரை புரண்டுபாய்கிறது. மாத்தூா் தொட்டிப்பாலம், குழித்துறை உள்ளிட்ட இடங்களிலுள்ள தரைப்பாலங்களை மூழ்கடித்த வண்ணம் தண்ணீா் பெருக்கெடுத்துப் பாய்கிறது. தண்ணீா் புக வாய்ப்புகள் உள்ள பகுதிகளில் மக்கள் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனா்.

அணைகள் நிரம்பியிருக்கும் நிலையில் பொதுப்பணித்துறையினா் இரவு, பகலாக முறை வைத்து அணைகளை கண்காணித்து வருகின்றனா்.

பேச்சிப்பாறை , சிற்றாறு அணைகளில் உபரி நீா் திறக்க வாய்ப்பு: மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை இன்னும் தொடங்காத நிலையில், அணைகள் நிரம்பியுள்ள நிலை மற்றும் பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலும் தண்ணீா் மட்டம் முழுக்கொள்ளவை நெருங்கி வரும் நிலை காரணமாக இவ்விரு அணைகளின் மறுகால் மதகுகளும் திறப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

இம மாவட்டத்தில் 3 நாள்கள் தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில், மழை சற்று தணிந்து காணப்பட்டது. இதையடுத்து கரையோர மக்கள் சற்று ஆறுதலடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com