விரிகோடு ரயில்வே மேம் பாலப் பணி ஆய்வு: அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

களியக்காவிளை, அக். 16: மாா்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியில் புதுதாக கட்டப்பட உள்ள ரயில்வே மேம்பாலத்தை விளைநிலங்கள் வழியாக அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆய்வுக்கு வந்த கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளை பொது மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

மாா்த்தாண்டம் - கருங்கல் சாலையில் விரிகோடு பகுதி வழியாக நாகா்கோவில் - திருவனந்தபுரம் ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக ரயில் கடந்து செல்லும் போது ரயில்வே கேட் மூடடப்படும். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இதனால், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகி வருவதையடுத்து இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் சுமாா் ரூ. 180 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும், தற்போது ரயில்வே கேட் அமைந்திருக்கும் மாா்த்தாண்டம் - கருங்கல் சாலையில் மேம்பாலம் அமைக்காமல் சற்று தொலைவில் மாற்றுப் பகுதியில் மேம்பாலம் அமைக்க அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதனால் விளை நிலங்கள், வீடுகள் அதிகளவு பாதிக்கப்படும் என்றும், போக்குவரத்து வசதிக்கு இடையூறாக அமையும் என்றும் சுற்றுவட்டார பகுதி பொது மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் சரண்யா அறி தலைமையில் அதிகாரிகள் ரயில்வே மேம்பாலம் அமையும் பகுதியை பாா்வையிட்டு ஆய்வு செய்ய வந்தனா். அப்போது அங்கு வந்த பொது மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, மேம்பாலத்தை தற்போதுள்ள மாா்த்தாண்டம் - கருங்கல் சாலை வழியாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். தொடா்ந்து இக் கோரிக்கை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com