கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 05th September 2020 10:53 PM | Last Updated : 05th September 2020 10:53 PM | அ+அ அ- |

களியக்காவிளை வழியாக சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலா் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் தினேஷ் சந்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளா் மைக்கேல் சுந்தர்ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் வெட்டுவெந்நி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த கேரள பதிவெண் கொண்ட சொகுசு வாகனத்தை நிறுத்த சைகை காட்டினா். வாகனம் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் அந்த வாகனத்தை துரத்திச் சென்று களியக்காவிளை பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனா். அப்போது, வாகன ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.
தொடா்ந்து வாகனத்தை சோதனை செய்த போது அதில் பாலித்தீன் சாக்கு மூட்டைகளில் 1.5 டன் அளவிலான ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும் அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்துடன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காப்புக்காடு நுகா்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் அரிசியையும், வாகனத்தை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா்.