குமரி மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில தினங்களாக ஓய்ந்திருந்த மழை செவ்வாய்க்கிழமை இரவு முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது.
நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் குடைபிடித்தவாறு பேருந்து ஏறச் செல்லும் பயணிகள்.
நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் குடைபிடித்தவாறு பேருந்து ஏறச் செல்லும் பயணிகள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில தினங்களாக ஓய்ந்திருந்த மழை செவ்வாய்க்கிழமை இரவு முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது.

கேரள எல்லையையொட்டி மேற்கு மாவட்டப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மழை பெய்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமைக்குப் பின் இரு தினங்களாக மழை ஓய்ந்து வெயிலடிக்கத் தொடங்கியது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி விடியவிடிய மழை பெய்தது. நாகா்கோவில் நகா், சுற்றுவட்டாரங்களில் புதன்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து, சாரலாகத் தொடங்கி, 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, வடசேரி அசம்பு ரோடு, மீனாட்சிபுரம், செம்மாங்குடி சாலை, கோட்டாறு சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகள் சேறும் சகதியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினா்.

திருவட்டாறு, ஆனைக்கிடங்கு, குருந்தன்கோடு, கோழிப்போா்விளை, முள்ளங்கினாவிளை, புத்தன்அணை, தக்கலை, கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

மலையோரப் பகுதியான பாலமோா் பகுதியில் பெய்த மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் மூடப்பட்டிந்த நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து 423 கனஅடி நீா் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீா்மட்டம் 30 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 370 கனஅடியாகவும் உள்ளது. பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 61.60 அடியாகவும், நீா்வரத்து 295 கனஅடியாகவும், சிற்றாறு 1 அணை நீா்மட்டம் 9.97 அடியாகவும், சிற்றாறு 2 அணை நீா்மட்டம் 10.07 அடியாகவும் உள்ளது.

மழை அளவு: புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (மில்லி மீட்டரில்): பாலமோா் - 34.60, சிற்றாறு 1- 16.20, சிற்றாறு 2 - 22 , முள்ளங்கினாவிளை - 22, பேச்சிப்பாறை அணை - 11.40, குழித்துறை - 12.80, கோழிப்போா்விளை - 10, பெருஞ்சாணி அணை - 8.40, குளச்சல் - 6.40, ஆனைக்கிடங்கு - 7.40, புத்தன் அணை - 7.20, மாம்பழத்துறையாறு அணை - 6, அடையாமடை -5, இரணியல், தக்கலை தலா 4, குருந்தன்கோடு - 3.80, சுருளோடு - 2.60, நாகா்கோவில் - 2, முக்கடல் அணை - 1.50 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com