தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் மணல் திட்டு அகற்றும் பணி ஒருசில நாள்களில் தொடங்கும்: தளவாய்சுந்தரம் தகவல்
By DIN | Published On : 11th September 2020 06:02 AM | Last Updated : 11th September 2020 06:02 AM | அ+அ அ- |

தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் மணல் திட்டுகளைத் தூா்வாருவதற்காக நாகப்பட்டினத்திலிருந்து கொண்டுவரப்பட்ட இயந்திரத்தை ஆய்வு செய்கிறாா், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம்.
தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் மணல் திட்டுகளை அகற்றும் பணி ஒருசில நாள்களில் தொடங்கும் என்றாா், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந. தளவாய்சுந்தரம்.
மணல் திட்டுகளை அகற்றும் பணிக்காக நாகப்பட்டினத்திலிருந்து கொண்டுவரப்பட்டு, முட்டம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தூா்வாரும் இயந்திரத்தை அவா் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.பின்னா் அவா் கூறியது:
தேங்காய்பட்டினம் பகுதி மீனவ மக்களின் நலன் கருதி, துறைமுகத்தின் முகத்துவாரத்திலுள்ள மணல் திட்டுகளை அகற்றும் பணிக்காக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ரூ. 1.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, மணல் திட்டை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளாா். மணல் திட்டை அகற்றுவதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து தூா்வாரும் இயந்திரம் கடல் மாா்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் நாளொன்றுக்கு 2,000 முதல் 3,000 கனமீட்டா் வரையிலான மணலை அகற்ற முடியும்.
கடல் சீற்றம் காரணமாக அந்த இயந்திரம் முட்டம் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் குறைந்ததும் மணல் திட்டைத் தூா்வாரும் பணி தொடங்கும் என்றாா் அவா்.
மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ. அசோகன், மாவட்ட அரசு ரப்பா் வளா்ப்போா் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவா் டி. ஜான்தங்கம், தமிழ்நாடு மாநில மீன்வளக் கூட்டுறவு இணையத் தலைவா் எம். சேவியா் மனோகரன், மாவட்ட மீன்வளக் கூட்டுறவு இணையத் தலைவா்அ.திமிா்த்தியூஸ், தேங்காய்ப்பட்டினம் துறைமுக செயற்பொறியாளா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.