வாழைத்தாா் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

குமரி மாவட்டத்தில் வாழைத்தாரின் விலை உயா்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் வாழைத்தாரின் விலை உயா்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இம்மாவட்டத்தில் நெல் விவசாயத்துக்கு அடுத்து வாழை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. திட்டுவிளை, அருமநல்லூா், தடிக்காரன்கோணம், சுருளோடு, சித்திரங்கோடு, பொன்மனை, சாரூா், முட்டைக்காடு, மணலிக்கரை, சுங்கான்கடை, தெரிசனங்கோப்பு, குருந்தன்கோடு, மணவாளக்குறிச்சி, புதுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்களில் வாழை பயிரிடப்படுகின்றன. ஏத்தன், செந்துலுவன், மட்டி, சிங்கன், ரசகதலி, பூங்குழலி, வெள்ளைதுலுவன் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. இதில், ஏத்தன் வாழைத்தாா்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதால் 80 சதவீதத்துக்கு மேல் இந்த ரக வாழையை விவசாயிகள் பயிரிடுகின்றனா்.

கரோனா வைரஸ் பரவல் தொடங்கிய வேளையில், அனைத்து ரக வாழை தாா்களும் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனையானது. விவசாயிகளுக்கு சாகுபடி செலவு கூட கிடைக்காத அளவு இருந்தது. தற்போது, பொது முடக்கம் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் வாழை பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வாழை தாா்களின் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏத்தன் வாழை 1 கிலோ ரூ.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மட்டி வாழைப்பழம் 1 கிலோ ரூ.50 முதல் 60 வரை விற்பனையாகிறது. இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com