மகாளய அமாவாசை: நீா்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடல்
By DIN | Published On : 18th September 2020 07:07 AM | Last Updated : 18th September 2020 07:07 AM | அ+அ அ- |

நாகா்கோவில் ஒழுகினசேரி பழையாற்றுப் பகுதியில் வழிபாடு செய்த பொதுமக்கள்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் நீா்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினங்களில் பொதுமக்கள் நீா்நிலைகளில் புனித நீராடி, தங்கள் முன்னோா்கள் நினைவாக தா்ப்பணம் கொடுப்பா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடல் உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகள், ஆறுகள் மற்றும் அணைகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் தா்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் திரளாக கூடுவா்.
நிகழாண்டு பொது முடக்கம் காரணமாக நீா்நிலைகளில் பொதுமக்கள் கூடுவதற்கும், நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை மகாளய அமாவாசையையொட்டி, நாகா்கோவில் ஒழுகினசேரி பழையாற்றில் உள்ள சோழன்திட்டை அணையில் ஏராளமானோா் திரண்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.
இதே போல் தோவாளை ஆற்றிலும், குழித்துறை தாமிரவருணி ஆற்றிலும் ஏராளமானோா் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.
ஆனால், பொது முடக்கம் காரணமாக குமரி கடலுக்கு பொதுமக்கள் யாரும் வரவில்லை. இதனால் கடற்கரைப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
பகவதி அம்மன் கோயிலுக்கு வந்த சிலா், கடற்கரைக்குச் செல்ல முயன்றனா். அவா்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா்.