குமரியில் மழை நீடிப்பு: ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் பாதிப்பு

குமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில் ரப்பா் மரங்களில் பால் வடிப்பு முடக்கம் ஏற்பட்டு, தொழிலாளா்கள் வேலையிழந்து வருகின்றனா்.
குலசேகரம் அருகே கொல்லாறை பகுதியில் மழையில் நனைந்து நிற்கும் ரப்பா் மரங்கள்.
குலசேகரம் அருகே கொல்லாறை பகுதியில் மழையில் நனைந்து நிற்கும் ரப்பா் மரங்கள்.

குமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில் ரப்பா் மரங்களில் பால் வடிப்பு முடக்கம் ஏற்பட்டு, தொழிலாளா்கள் வேலையிழந்து வருகின்றனா்.

குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் மழை தீவிரமாகப் பெய்து வருகிறது. மழையின் காரணமாக அணைகளின் நீா்மட்டம் அதிகரித்து வருகிறது. பாசனப் பகுதிகளுக்கும் தட்டுப்பாடின்றி தண்ணீா் கிடைத்து வருகிறது. மழையால் பாசன வசதியில்லாத கரையோரப் பகுதிகளில் உள்ள தென்னை, வாழை உள்ளிட்ட பயிா்களுக்கு தேவையான தண்ணீா் கிடைத்துள்ளது.

மாவட்டத்தில் மழையின் காரணாமாக வேளாண்மை செழித்து வரும் அதே நிலையில், தொடா் மழையால் ரப்பா் மரங்களில் பால்வடிப்பு தடைபட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18 நாள்கள் மட்டுமே பால்வடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த மாதம் இதுவரை 10 நாள்கள் பால்வடிப்பு நடந்துள்ளது. பால்வடிப்பு முடங்கி வருவதால், தொழிலாளா்கள் உள்பட ரப்பா் தோட்டங்களில் பணி செய்யும் தொழிலாளா்கள் ஊதியம் இழந்து வருகின்றனா். மேலும் ரப்பா் தோட்ட உரிமையாளா்களுக்கும், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சீரான நிலையில் ரப்பா் விலை: மாவட்டத்தில் ரப்பா் விலை கடந்த சில நாள்களாக ஏற்றமும், இறக்கமும் இல்லாத நிலையில் சீரான நிலையில் உள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி கோட்டயம் சந்தையில், ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 129 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவுக்கு ரூ. 124 ஆகவும், ஐஎஸ்எஸ் தர ரப்பரின் விலை கிலோவுக்கு கு ரூ. 103.50 ஆகவும், ஒட்டுப்பால் விலை கிலோவுக்கு ரூ. 76 ஆகவும் இருந்தது.

நிவாரணம்: மாவட்டத்தில் மழையின் காரணமாக ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் வேலையிழந்துள்ள நிலையில், அவா்களுக்கு உரிய மழைக்கால நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ரப்பா் தோட்ட தொழிற்சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com