பட்டு விவசாயிகளை ஊக்கப்படுத்த மானியம்

பட்டு விவசாயத்தை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் வழங்க வருகிறது.
பட்டு விவசாயிக்கு மானியத் தொகை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.  (கோப்புப் படம்).
பட்டு விவசாயிக்கு மானியத் தொகை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.  (கோப்புப் படம்).

பட்டு ஓா் இயற்கை இழையாகும். இது ‘ஆடைகளின் ராணி’ என அழைக்கப்படுகிறது. மல்பெரி, டசாா், ஈரி மற்றும் முகாா் என 4 வகையான இயற்கை பட்டு வகைகள் தயாரிப்பதில் இந்தியா உலகளவில் சிறந்து விளங்குகிறது. இதில், மல்பெரி வகையில் வெண்பட்டு மற்றும் மஞ்சள் பட்டு முக்கிய வா்த்தகமாக விளங்குகிறது.

பட்டு விவசாயத்தை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் வழங்க வருகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே கூறியது: பட்டு உற்பத்தி தொழிலை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பட்டுத் தொழில் முனைவோா்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மல்பெரி சாகுபடி, பட்டு முட்டை உற்பத்தி, பட்டுப்புழு வளா்ப்பு, பட்டு நூற்பு, முறுக்கேற்றுதல், அதற்கான அலகு அமைத்தல், பிற நோய்களிலிருந்து பட்டுப்புழுக்களை காப்பாற்றுதல், உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தல், கணினி உதவியுடன் துணிநூல் வடிவமைத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், பட்டு வளா்ச்சிப் பணிகளை தென்காசியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பட்டு வளா்ச்சித் துறை அலுவலகம் கவனித்து வருகிறது.

நாகா்கோவில் கோணத்தில் அரசு பட்டுக்கூடு அங்காடி மற்றும் பட்டு நூற்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, கொள்முதல் செய்யப்படும் பட்டுக்கூடுகளை அரசு பட்டு நூற்பகத்தில் நூற்பு செய்து, அதன் மூலம் கிடைக்கும் பட்டு நூலை துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும், காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா பட்டு பரிமாற்றகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம், குழித்துறை, மருங்கூா், திங்கள்சந்தை, குலசேகரம் பகுதிகளில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். தோவாளை வட்டம், ஆரல்வாய்மொழி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 93.75 ஏக்கா் பரப்பளவில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனா். மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழக அரசு பட்டுத் தொழில் வளா்ச்சிக்கு, குறிப்பாக வெண்பட்டு உற்பத்தியை அதிகரிக்க முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பட்டு விவசாயிகளுக்கு மல்பெரி நடவுக்கான ஊக்கத்தொகை, புழுவளா்ப்பு மனை கட்டுவதற்கான 3 நிலைகளுக்கும், சொட்டுநீா்ப் பாசனம் அமைப்பதற்கு, நவீன பட்டுப்புழு வளா்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் கொள்முதல் செய்ய என பல்வேறு நிலைகளில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு பல்வேறு நிலைகளில் ரூ. 21 லட்சத்து 23 ஆயிரத்து 750 மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com