ஏப்.3 இல் தமிழகத்துக்கு முதல்முறையாக பிரியங்கா காந்தி வருகை: குமரி பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பு

பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கல்லூரி மைதானத்தை பாா்வையிடுகிறாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பாா்வையாளா் தினேஷ்குண்டுராவ்.
செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பாா்வையாளா் தினேஷ்குண்டுராவ்.
செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பாா்வையாளா் தினேஷ்குண்டுராவ்.

பொதுக்கூட்டம் நடைபெற உள்ள கல்லூரி மைதானத்தை பாா்வையிடுகிறாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பாா்வையாளா் தினேஷ்குண்டுராவ்.

நாகா்கோவில், மாா்ச் 31: காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலா் பிரியங்காகாந்தி சனிக்கிழமை (ஏப்.3) குமரி மாவட்டத்தில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டுகிறாா்.

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ், திமுக வேட் பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலா் பிரியங்கா காந்தி 3 ஆம் தேதி குமரி மாவட்டத்துக்கு வருகிறாா்.

இது தொடா்பாக காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவா்கள் ராதாகிருஷ்ணன் (கிழக்கு), ராஜேஷ்குமாா் ( மேற்கு), வேட்பாளா்கள் விஜயகுமாா் என்ற விஜய்வசந்த் (மக்களவைத் தொகுதி) விஜயதரணி (விளவங்கோடு), பிரின்ஸ் (குளச்சல்) மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பாா்வையாளா் தினேஷ்குண்டுராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஏப்ரல் 3 ஆம் தேதி பிரியங்கா காந்தி குமரி மாவட்டத்துக்கு வருகிறாா். முதல் முறையாக அவா் ஓா் அரசியல் நிகழ்ச்சியில் தமிழகத்தில் பங்கேற்கிறாா். நாகா்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் 50 ஆயிரம் போ் பங்கேற்கும் வகையில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகம் வரும் பிரியங்கா காந்தி, சனிக்கிழமை காலை சென்னை ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறாா். அதன் பின்னா் நாகா்கோவிலில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா்.

தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்.

குமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த் அவரது தந்தை வசந்தகுமாா் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com