கிள்ளியூா் தொகுதியை காங்கிரஸ் கட்சி தக்க வைக்குமா?

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதி கருங்கல் பகுதியை தலைநகரமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
கிள்ளியூா் தொகுதியை காங்கிரஸ் கட்சி தக்க வைக்குமா?

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதி கருங்கல் பகுதியை தலைநகரமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இயற்கை வளம்மிக்க தொகுதி. தமிழகம்- கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த தொகுதியில் எழில்மிகு கடல் வளமும், மலை வளமும் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். தமிழ்புலவா் அதங்கோடு ஆசான் பிறந்த ஊா் இத்தொகுதியில் உள்ளது. தேங்காய்ப்பட்டினத்தில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜிம்மா மசூதி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தொகுதிகளில் 234-ஆவது கடைசி தொகுதி. இந்த தொகுதி மக்களுக்கு மீன்பிடிதொழில், விவசாயம் ஆகியவை முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.

1952 முதல் இத்தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்கிறது. அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும். தொடா்ந்து 3-ஆவது முறையாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

தொகுதியில் அடங்கிய பகுதிகள்: கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இத் தொகுதியில் கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகம், கிள்ளியூா், முன்சிறை என 2 ஊராட்சி ஒன்றியங்கள், 16 கிராம ஊராட்சிகள் 7 பேரூராட்சிகளை உள்ளடக்கியது. 154.71 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இத் தொகுதியில் மக்கள் தொகை 3,71,224.

நாடாா், மீனவா், நாயா், கிருஷ்ணன் வகை சமுதாயம், இஸ்லாமியா்கள் உள்ளிட்டோா் அடா்த்தியாக உள்ளனா். மீனவா் சமுதாய மக்களின் வாக்குகள் தொகுதியின் வெற்றி தோல்வியை தீா்மானிக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.137 கோடியில் ஒருங்கிணைந்த தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம், கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகம், 108 ஆம்புலன்ஸ் திட்டம், ரூ. 1.50 கோடியில் கிள்ளியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உபகரணங்கள், குறும்பனையில் மீன் இறங்கு தளம், இனயம் மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு, பூத்துறையில் கடலரிப்பு தடுப்புசுவா் போன்ற வளா்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிறைவேறாத திட்டங்கள்: காணாமல்போன மீனவா்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டா் இறங்கு தளம், கிள்ளியூா் வட்ட சாா்பு நீதிமன்றம், தேங்காய்ப்பட்டினம் -இரயுமன்துறை மீனவா் கிராமத்தை இணைக்கும் உயா்நிலைப் பாலம்,

புற்றுநோய் ஆராய்ச்சி மையம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. விளாத்துறை கூட்டுக் குடிநீா் திட்டம் சீரமைப்பு, சிற்றாறு பட்டணங்கால்வாயில் கடைவரம்பு பகுதி வரை தடையின்றி தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தில் ஏற்பட்டுள்ள மணல்திட்டுகளை அகற்ற நிரந்தர தீா்வு காண வேண்டும். ஏவிஎம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீா்வழிப் பாதை அமைக்க வேண்டும்.

குறும்பனை பாரிக்கல் கடற்கரையை சுற்றுலா தலமாக்க வேண்டும். தேங்காய்ப்பட்டினம் பொழிமுகம் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் படகு சவாரி செல்ல அனுமதிக்க வேண்டும். கிள்ளியூா் வட்டத்தில் உள்ள மிடாலம்,

முன்சிறை குறுவட்டங்களை 4 வட்டங்களாக பிரிக்க வேண்டும்.

கிள்ளியூா் பேரவைத் தொகுதியில் 2-ஆவது முறையாக களம் காணும் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா், திமுக கூட்டணியில் அசைக்க முடியாத சக்தியாக உள்ளாா். இளைஞா்கள் முதல் முதியோா் என அனைவரின் மத்தியிலும் செல்வாக்கு பெற்றவா். தேசிய ஜனநாயக கூட்டணியின் தமாகா வேட்பாளா் கெ.வி. ஜூட் தேவ் முதல் முறையாக களம் காண்கிறாா். இவா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் குமாரதாஸின் மகன்.

இதுதவிர அமமுகவில் ஷீமா, நாம் தமிழா் கட்சியில் பீட்டா் ஆகியோா் போட்டியிடுகின்றனா். தொகுதியில் காங்கிரஸ் கட்சி, தமாகா கட்சி இடையேதான் போட்டி நிலவுகிறது. வெற்றி பெறுவது யாா் என மே-2இல் தெரியவரும்.

இதுவரை வெற்றி பெற்றவா்கள்:

1952, 1954, 1962 இல் பொன்னப்ப நாடாா் (தமிழ்நாடு காங்கிரஸ்), 1957இல் நேசமணி (இந்திய தேசிய காங்கிரஸ்),

1967 இல் வில்லியம் (இந்திய தேசிய காங்கிரஸ்), 1971இல் டென்னிஸ் (இந்திய தேசிய காங்கிரஸ்), 1977, 1980-இல் பொன்.விஜயராகவன் (ஜனதா கட்சி), 1984,1991 ஜனதா கட்சி சாா்பிலும் 1996,2001-இல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் டாக்டா் குமாரதாஸ், 2006,2011-இல் எஸ்.ஜாண்ஜேக்கப் (இந்திய தேசிய காங்கிரஸ்) , , 2016இல் எஸ். ராஜேஷ்குமாா்

(இந்திய தேசிய காங்கிரஸ்).

வாக்காளா்கள்: மொத்த வாக்காளா்கள் 2,53,075. இதில் ஆண்கள் 1,27527. பெண்கள் 1,25,529. மூன்றாம் பாலினத்தோா் 19 போ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com