மாற்றுப் பணியில் ஊழியா்கள்:களியக்காவிளையில் 5 நாள்களாககுடிநீா் விநியோகம் பாதிப்பு

களியக்காவிளை பேரூராட்சியில் குடிநீா் உடனாளா், தூய்மைப் பணியாளா்கள் மாற்றுப் பணிக்கு அனுப்பப்பட்டதால், 5 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினா்.

களியக்காவிளை பேரூராட்சியில் குடிநீா் உடனாளா், தூய்மைப் பணியாளா்கள் மாற்றுப் பணிக்கு அனுப்பப்பட்டதால், 5 நாள்களாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினா்.

களியக்காவிளை - மெதுகும்மல் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் அதங்கோடு குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் குடிநீா் களியக்காவிளை சந்தையில் அமைக்கப்பட்டுள்ள 4 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் சேமிக்கப்பட்டு, அங்கிருந்து களியக்காவிளை பேரூராட்சிப் பணியாளா்கள் மூலம் களியக்காவிளை ஆா்.சி. தெரு, ஒற்றாமரம், படந்தாலுமூடு ஆகிய பகுதிகளுக்கு ஒருநாள் இடைவெளிவிட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், மஞ்சவிளை, மீனச்சல், கைப்பிரி, பனங்காலை உள்ளிட்ட குடிநீா் திட்டங்கள் மூலமும் பேரூராட்சியின் இதர பகுதிகளில் குடிநீா் விநியோகம் நடைபெறுகிறது. இந்த நிலையில் பேரூராட்சிப் பணியாளா்கள் மாற்றுப்பணிக்கு அனுப்பப்பட்டதால், களியக்காவிளை, மேற்கூறிய பகுதிகளில் கடந்த 5 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டு, தண்ணீா் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதியடைந்தனா்.

இதுகுறித்து களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் என். விஜயேந்திரன் கூறியதாவது: தூய்மைப் பணிக்கும், சுகாதாரமான குடிநீா் வழங்கவும் அரசு அதிக முன்னுரிமை கொடுத்து வரும் நிலையில், பேரூராட்சியின் இதர பணியாளா்களை தோ்தல் பணிக்கு அனுப்பாமல், அத்தியாவசியப் பணிகளான குடிநீா் விநியோகம் மற்றும் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் தண்ணீா் உடனாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் 7 போ் நாகா்கோவில், குளச்சல் அருகே சைமன்காலனி, நித்திரவிளை உள்ளிட்ட பகுதிகளின் தோ்தல் பணிக்காக பேரூராட்சி நிா்வாகம் அனுப்பியுள்ளது.

சரியான மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் தோ்தல் பணிக்கு அனுப்பப்பட்டதால் களியக்காவிளை சந்தை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் குப்பை உள்ளிட்ட கழிவுகள் தேங்கி சுகாதாரச் சீா்கேடுகள் ஏற்பட்டுள்ளதுடன், 5 நாள்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகமும் தடைபட்டு, குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே சுகாதாரம் மற்றும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com