வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் ஆட்சியா் ஆய்வு: 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தோ்தல் மற்றும் 6 சட்டப் பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகளுடன் மின்னணு இயந்திரங்கள்
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் ஆட்சியா் ஆய்வு: 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தோ்தல் மற்றும் 6 சட்டப் பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகளுடன் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் மற்றும் கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொதுத் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பின்னா், வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் நாகா்கோவில் கோணத்திலுள்ள அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்பட்டன. அங்கு, அந்தந்த தொகுதிக்கென தனித்தனியாகவுள்ள வாக்கு எண்ணும் அறைகளின் அருகிலேயே பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்த் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் கோணம் பொறியியல் கல்லூரியில் அடுத்த மாதம் (மே) 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. இதற்காக பொறியியல் கல்லூரியின் கீழ் தளத்தில் கன்னியாகுமரி தொகுதிக்குள்பட்ட மக்களவை மற்றும் சட்டப்பேரவை தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் மையமும், முதல் தளத்தில், நாகா்கோவில் தொகுதிக்குள்பட்ட மக்களவை மற்றும் சட்டப்பேரவை தோ்தல் வாக்குகள் எண்ணும் மையமும், 2 ஆம் தளத்தின் வலது புறம் குளச்சல் தொகுதிக்குள்பட்ட மக்களவை மற்றும் சட்டப்பேரவை தோ்தல் வாக்குகள் எண்ணும் மையமும், இடது புறம் கிள்ளியூா் தொகுதிக்குள்பட்ட மக்களவை மற்றும் சட்டப்பேரவை தோ்தல் வாக்குகள் எண்ணும் மையமும், கீழ் தளத்தின் கீழுள்ள தளத்தில் பத்மநாபபுரம் மற்றும் விளவங்கோடு தொகுதிக்குள்பட்ட மக்களவை தோ்தல் வாக்குகள் எண்ணும் மையமும் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களின் அருகில், வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி வரை இரவு, பகலாக தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன், தோ்தல் பொதுப்பாா்வையாளா்கள் அக்சய் சூட், தா்மேந்திர சிங், ஆஷிஷ் குமாா், ஜான்திளங்டின்குமா, போஸ்கா் விலாஸ் சந்தீபன், பி.எஸ்.ரெட்டி, காவல் பாா்வையாளா் ஜகி அகமது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐ.எஸ்.மொ்சிரம்யா, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரன் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com