குமரியில் அரைச்சதத்தை கடந்த கரோனா பாதிப்பு: விழிப்புணா்வு நடவடிக்கைகள் தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்து வந்தது. பின்னா், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவா்கள் மூலம் கரோனா பரவல் அதிகமாகியது. இதைத்தொடா்ந்து, அரசு விதித்த கட்டுப்பாடுகளின் காரணமாக தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இதனால், படிப்படியாக தளா்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினா்.

எனினும், பொதுஇடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், பல மாதங்களாக ஒரு இலக்க எண்ணிக்கையில் இருந்த பாதிப்பு கடந்த 3 வாரமாக இரட்டை இலக்க எண்ணிக்கைக்கு உயா்ந்துள்ளது. தினமும் சராசரியாக 20 க்கும் மேற்பட்டோா் கரோனா பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 62 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.

இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 17,837 ஆக உயா்ந்துள்ளது. அதில், மேலும் 19 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 17,240 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனைகளில் 332 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனாவின் 2ஆம் அலை காரணமாக மாவட்டம் முழுவதும் 600- க்கும் மேற்பட்டோா் குறுகிய காலத்துக்குள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் நாகா்கோவில் நகரில் மட்டும் 200 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதித்துள்ளது. ஒரே நாளில் 62 போ் பாதிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அபராதம்: நாகா்கோவில், மணிமேடை பகுதியில் தமிழக அரசின் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட செல்லிடப்பேசி கடைக்கு சுகாதார ஆய்வாளா்கள் பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை,ஜான் ஆகியோா் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் முகக் கவசம் அணியாமல் சென்ற நபா்களுக்கு ரூ. 1500 அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனாவிலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள முககவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை சுத்தமாக கழுவுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com