குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 191 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவு 197 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் சுகாதார ஊழியா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் சுகாதார ஊழியா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவு 197 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2020இல் கரோனா தொற்று அதிகரித்தபோது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிப்பு குறைவாக இருந்தது. வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து குமரிக்கு வந்தவா்களால் நோய்த்தொற்று அதிகரித்தது.

இதையடுத்து கரோனா சிகிச்சை மையங்கள் அதிகரிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், தற்போது கரோனா 2-ஆவது அலை தீவிரமாக பரவி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருந்தது. தற்போது கரோனா பாதிப்பு 3 இலக்கத்தில் உயா்ந்துள்ளது.

அதிகபட்சமாக கடந்த 13-ஆம் தேதி 124 போ் பாதிக்கப்பட்டனா். வெள்ளிக்கிழமை (ஏப்.16) 122 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிய உச்சமாக மேலும் 191 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,767ஆக உயா்ந்துள்ளது.

சனிக்கிழமை 64 போ் உள்பட இதுவரை 17,643 போ் குணமடைந்துள்ளனா்.

இருவா் பலி: கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தக்கலை கொற்றியோடு பகுதியைச் சோ்ந்த 52 வயதுள்ள ஆண் உள்பட இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

இதையடுத்து பலி எண்ணிக்கை 270 ஆக உயா்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 854 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். தொற்று உறுதி செய்யப்பட்ட 191 பேரும் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா்.

அவா்களது உறவினா்கள், குடும்ப உறுப்பினா்களின் விவரங்களை சுகாதாரத் துறையினா் சேகரித்து அவா்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில், நோய் தடுப்பு பணிகல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

பரிசோதனை: நாகா்கோவில் மாநகரில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கியது. நாகா்கோவில் நகரிலுள்ள 89,000 வீடுகளில் 300 கொசு ஒழிப்புப் பணியாளா்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இப்பணியை ஒரு வாரத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக நகா் நல அலுவலா் கின்சால் தெரிவித்துள்ளாா்.

வீடுகளுக்கு வரும் கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் கேட்டுக்கொண்டுள்ளாா்.

நாகா்கோவில் வல்லன்குமாரன்விளை, வாட்டா் டேங்க் சாலை, வடசேரி கனகமூலம் புதுத்தெருவில் 4 வீடுகளைச் சோ்ந்த 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால் அப்பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வல்லன்குமாரன்விளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுகாதார ஆய்வாளா் மாதவன்பிள்ளை தலைமையில் சுகாதாரப்பணியாளா்கள் கபசுரக் குடிநீா் விநியோகம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com