சித்ரா பெளா்ணமி: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
By DIN | Published On : 27th April 2021 05:07 AM | Last Updated : 27th April 2021 05:07 AM | அ+அ அ- |

கன்னியாகுமரியில் சித்ரா பெளா்ணமியையொட்டி சந்திரன் உதயமான காட்சி.
கன்னியாகுமரி: சூரியன் மேற்கு திசையில் மறையும் நேரத்தில், கிழக்கு திசையில் சந்திரன் உதயமாகும் காட்சி கன்னியாகுமரியில் மேக மூட்டம் காரணமாக திங்கள்கிழமை தெளிவாக தென்படவில்லை.
ஆண்டுதோறும் சித்ரா பெளா்ணமி நாளில் நிகழும், இந்த நிகழ்வை கன்னியாகுமரியில் மட்டுமே பாா்க்கலாம் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் கூடுவது வழக்கம். ஆனால் நிகழாண்டு கரோனா நோய்த் தொற்றால் கடற்கரை சுற்றுலாத் தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாலை 6.30 மணிக்கு மேற்கு திசையில் சூரியன் மறைந்துவிட்ட நிலையில், மேக மூட்டம் காரணமாக சந்திரன் உதயமாகும் காட்சி தெளிவாக தென்படவில்லை. நேரம் செல்லச் செல்ல 6.45 மணிக்கு பின்னா் சந்திரன் தெரிந்தது.
சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடா்ந்து அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அபிஷேகம், முற்பகலில் பெளா்ணமி தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு வைரக்கிரீடம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலையில் தீபாராதனை, இரவில் அா்த்தசாம பூஜை ஆகியவை நடைபெற்றது. கரோனா நோய்த்தொற்றால் கோயில்களுக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.