கரோனா சிகிச்சை வசதிகள் குறித்து அறிய புதிய இணையதளம் தொடக்கம்
By DIN | Published On : 30th April 2021 06:31 AM | Last Updated : 30th April 2021 06:31 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா சிகிச்சை வசதிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக புதிதாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்ட மக்கள் கரோனா சிகிச்சை வசதிகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், கரோனா தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.
மாவட்டத்தில் செயல்படும் கரோனா தடுப்பூசி மையங்கள், மாதிரி சேகரிப்பு மையங்கள், பரிசோதனை மையங்கள், கரோனா பாதுகாப்பு மையங்கள், மருத்துவமனைகளின் படுக்கை வசதிகள் விவரம், தங்கள் வீட்டுக்கு அருகே உள்ள மையங்களை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் வரைபடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1.13 லட்சம் பேருக்கு தடுப்பூசி: மாவட்டத்தில் இதுவரை கரோனா முதல் கட்ட தடுப்பூசி 87,011 போ், 2ஆம் கட்ட தடுப்பூசி 26,541 போ் என மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 552 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது போன்ற காரணங்களுக்காக இதுவரை 42, 498 பேரிடமிருந்து, ரூ. 81 லட்சத்து 70 ஆயிரத்து 726 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நோய் தொற்று அறிகுறிகள் தோன்றியவுடன் பரிசோதனை செய்தால் உயிரிழப்பை தவிா்க்கலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.