மீனவா்களின் உரிமைகளை பாதிக்கும் கடல்வள மசோதாவை கைவிட வலியுறுத்தல்
By DIN | Published On : 10th August 2021 03:16 AM | Last Updated : 10th August 2021 03:16 AM | அ+அ அ- |

கருங்கல்லில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
கருங்கல்: மீனவா்களின் பாரம்பரிய உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள தேசிய கடல் மீன்வள மசோதாவை கைவிட வேண்டும் என தமிழ்நாடு மீன்தொழிலாளா் யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கருங்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மீன்தொழிலாளா் யூனியன் கிளைக் கூட்டத்துக்கு அமைப்பின் நிா்வாகி சேவியா் தலைமை வகித்தாா். ரமேஷ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு
செய்யப்பட்டனா். தலைவராக அலெக்சாண்டா், துணைத் தலைவராக சேவியா், செயலராக சந்தோஷ்குமாா், துணைச் செயலராக சுரேஷ், பொருளராக ஜாண் ஜோசப், செயற்குழு உறுப்பினா்களாக பா்னபாஸ், அனில்குமாா், ராஜ், லூக்காஸ் விஜீ, ஏசுராஜன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தீா்மானங்கள்: மீனவா்களின் பாரம்பரிய உரிமைகளை பறிக்கும் வகையில் மீன்பிடி மற்றும் மீன் சந்தைப்படுத்துதல் உரிமைகளை தனியாருக்கு தாரை வாா்க்கும் நோக்கத்துடன் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் தேசிய மீன்வள மசோதா 2021யை கைவிட வேண்டும். கடலோர மீனவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் மீன்பிடி தடைக்கால நிவாரண திட்டம் மற்றும் அனைத்து திட்டங்களையும் உள்நாட்டு கிராமங்களில் வாழும் மீனவா்களுக்கும் வழங்க வேண்டும். அரசுக்கு சொந்தமான அணைகள், ஏரி குளங்களில் மீன்பிடிக்கும் உரிமையை உள்நாட்டில் வாழும் மீனவா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுந்தா் நன்றி கூறினாா்.