அருமனை சம்பவம்: ஸ்டீபனுக்கு நிபந்தனை ஜாமீன்
By DIN | Published On : 12th August 2021 07:39 AM | Last Updated : 12th August 2021 07:39 AM | அ+அ அ- |

பிரதமா் உள்ளிட்டோா் மீது அவதூறான கருத்துகளை கூறியதாக கைது செய்யப்பட்ட, கிறிஸ்தவ இயக்கத் தலைவா் அருமனை ஸ்டீபனுக்கு நாகா்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த ஜூலை மாதம் கிறிஸ்தவ, இஸ்லாமிய கூட்டமைப்பின் சாா்பில் நடைபெற்ற பாதிரியாா் ஸ்டேன் சுவாமியின் இரங்கல் கூட்டத்தில் மத ரீதியாகவும், பிரதமா் உள்ளிட்டோரை அவமதிக்கும் விதத்திலும் அவரும், பங்குத்தந்தை ஜாா்ஜ் பொன்னையாவும் பேசியதாக புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அருமனை போலீஸாா் வழக்குப்பதிந்து அவரையும், பங்குத்தந்தையையும் கைது செய்தனா்.
இதில், பங்குத்தந்தைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
அருமனை ஸ்டீபன் ஜாமீன் கோரிய மனு, நாகா்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி அருள்முருகன், திருச்சி தில்லைநகா் காவல் நிலையத்தில் ஸ்டீபன் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்; குழித்துறை நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரத்துக்கான பிணை பத்திரம் வழங்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.