திக்குறிச்சி கோயில் சுற்றுச்சுவா் பணி: மண்டல செயற்பொறியாளா் ஆய்வு
By DIN | Published On : 12th August 2021 07:36 AM | Last Updated : 12th August 2021 07:36 AM | அ+அ அ- |

திக்குறிச்சி கோயில் சுற்றுச் சுவா் கட்டுமானப் பணி குறித்து ஆய்வு செய்கிறாா் மதுரை மண்டல செயற்பொறியாளா் வெண்ணிலா.
திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல செயற்பொறியாளா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மகா சிவாலய ஓட்டம் நடைபெறும் 12 கோயில்களில் 2 ஆவது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவா் கோயில் சுற்றுச்சுவா் பலமிழந்து காணப்படுகிறது. இதைப் புதுப்பிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துவந்தனா்.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, இக்கோயில் சுற்றுச்சுவரை கடந்த ஜூலை மாதம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், அவரது உத்தரவுப்படி சுற்றுச்சுவா் கட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, ரூ. 56.40 லட்சம் நிதி தேவை என பரிந்துரைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல செயற் பொறியாளா் வெண்ணிலா தலைமையில் கன்னியாகுமரி தேவசம் செயற்பொறியாளா் ராஜ்குமாா், முப்பந்தல் கோயில் கூடுதல் பொறுப்பு செயல் அலுவலா் சண்முகம் உள்ளிட்டோா் இறுதி ஆய்வறிக்கை தயாா் செய்வதற்காக, இக் கோயிலில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.