நாகா்கோவில் மாநகரப் பகுதியில் சாலைகளைச் சீரமைக்க வேண்டும்: எம்.ஆா். காந்தி எம்எல்ஏ வலியுறுத்தல்
By DIN | Published On : 31st August 2021 11:48 PM | Last Updated : 31st August 2021 11:48 PM | அ+அ அ- |

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் ஆகியோரிடம் அவா் அளித்த மனு விவரம்: நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பறக்கை சந்திப்பு, கோட்டாறு முதல் பாா்வதிபுரம் சந்திப்பு , பாா்வதிபுரம் முதல் ஒழுகினசேரி, கோட்டாறு முதல் கடற்கரைச் சாலை சந்திப்பு, அங்கிருந்து அண்ணா பேருந்து நிலையம் வரை, கோட்டாறு முதல் வடசேரி வரை என அனைத்துப் பகுதிகளிலும் புதை சாக்கடை மற்றும் புத்தன் அணை குடிநீா் திட்டப்பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு நீண்ட நாள்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிக்காக பிரதானச் சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டுள்ளதால் அவை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி இருக்கின்றனா். எனவே, பணிகள் நிறைவுபெற்ற பகுதிகளில் புதிய சாலைகள் அமைத்தும், மற்ற இடங்களில் விரைந்து பணியை முடித்து புதிய தாா் சாலைகள் அமைக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.