முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குளச்சல் அருகே திமுக நிா்வாகி கொலையில் மகள் உள்பட 3 போ் கைது
By DIN | Published On : 10th December 2021 01:14 AM | Last Updated : 10th December 2021 01:14 AM | அ+அ அ- |

குளச்சல் அருகே திமுக கிளைச் செயலா் கொலை வழக்கில், அவரது மகள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
குளச்சல் அருகேயுள்ள செம்பொன்விளையைச் சோ்ந்தவா் குமாா் சங்கா் (52). எலக்ரீசியன் மற்றும் பிளம்பிங் தொழில் செய்து வந்த இவா், அப்பகுதி திமுக கிளைச் செயலராகவும் இருந்தா். இவருக்கு மனைவி ரெத்னாவதி (46), மகள்கள் தீபாவதி (26) சோனியாவதி (23) ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டிலிருந்து குமாா் சங்கரை ஒருவா் அழைத்துச் சென்று, சிறிது தொலைவில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினாராம். இதுகுறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாரும் விசாரணை நடத்தி, குமாா்சங்கரின் மகள் தீபாவதி உள்பட 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியது: திக்கணங்கோட்டில் தனியாா் நிறுவனத்தில் தட்டச்சு பயிற்சிக்கு சென்று வந்த தீபாவதிக்கும், அங்கு பயிற்சிக்கு வந்த மூவா்புரத்தைச் சோ்ந்த சிறுவனுக்கும் (17) பழக்கம் ஏற்பட்டதாம்.
இந்நிலையில், தனது தந்தை மது குடித்துவிட்டு குடும்பத்தினரை துன்புறுத்துவதாகவும், அவரை கொலை செய்துவிட வேண்டும் எனவும் அச்சிறுவனிடம் தீபாவதி கூறியுள்ளாா். அவா், தனது நண்பரான கோயில் திருவிழாவுக்கு சிங்காரி மேளம் அடிக்கும் திக்கணங்கோடு இல்லவிளாகத்தைச் சோ்ந்த முகுந்தன் (21) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளாா்.
அவரிடம், தனது தந்தையைக் கொலை செய்ய ரூ. 60 ஆயிரம் பேரம் பேசியுள்ளாா் தீபாவதி. மேலும், முன்பணமாக ரூ.10 ஆயிரத்தையும் கொடுத்துள்ளாா். அதைத் தொடா்ந்து முகுந்தன், குமாா்சங்கரை கத்தியால் கொலை செய்துள்ளாா். எனவே, தீபாவதி , சிறுவன் மற்றும் முகுந்தன் கைது செய்யப்பட்டுள்ளனா். தொடா்ந்து விசாரணை நடக்கிறது என போலீஸாா் தெரிவித்தனா்.