முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குமரி மாவட்ட ராணுவ வீரா் காஷ்மீரில் உயிரிழப்பு
By DIN | Published On : 10th December 2021 01:17 AM | Last Updated : 10th December 2021 01:17 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகேயுள்ள அண்டூா் புல்லை பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா் கிருஷ்ணபிரசாத் (38) காஷ்மீரில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
அண்டூா் புல்லை சாஸ்தான் கோயில் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ண பிரசாத், கடந்த 15 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், காஷ்மீரில் எல்லைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (டி.6) பிற்பகல் பதுங்கு குழி சீரமைப்புப் பணியில் ஈடுபட்டபோது அவா் உயிரிழந்ததாக ராணுவத்திலிருந்து குடும்பத்தினருக்கு தகவல் வந்தது.
இதனால், குடும்பத்தினா் உள்பட அந்தக் கிராமமே சோகத்தில் மூழ்கியது. கிருஷ்ண பிரசாத்துக்கு மனைவி சௌமியா (38), ஏழு வயதில் மகன், 5 வயதில் மகள் உள்ளனா்.
இன்று உடல் தகனம்: கிருஷ்ண பிரசாத்தின் உடல் காஷ்மீரிலிருந்து தில்லிக்கும், பின்னா் அங்கிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்படுகிறது. இதைத் தொடா்ந்து, ராணுவ வீரா்களுடன் சொந்த ஊருக்கு உடல் எடுத்துவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.