முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
நாகா்கோவில் - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதையை துரிதப்படுத்த வலியுறுத்தப்படும்: விஜய்வசந்த் எம்.பி.
By DIN | Published On : 29th December 2021 07:59 AM | Last Updated : 29th December 2021 07:59 AM | அ+அ அ- |

நாகா்கோவில் - திருவனந்தபுரம் இடையேயான இரட்டை ரயில் பாதை பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்துவேன் என்றாா் வ.விஜய்வசந்த் எம்.பி.
நாகா்கோவில் பள்ளிவிளையில் உள்ள டவுண் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கழிவறை, தண்ணீா் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும், பயணிகள் ஓய்வு அறை மற்றும் இருக்கைகள் சரியாக உள்ளதா என்பது குறித்தும் பாா்வையிட்டு ஆய்வு செய்த எம்.பி. , அங்கிருந்த ரயில் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
பின்னா் அவா் அளித்த பேட்டி: நாகா்கோவில் டவுண் ரயில் நிலையம் வருமானத்தின் அடிப்படையில் ‘எப்’ கிரேடில் இருந்து ‘டி’ கிரேடுக்கு முன்னேறியுள்ளது. ஆனால் அதற்கான வசதிகள் எதுவும் இங்கு இல்லை. விரைவில் அதற்கான வசதிகளை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரயில் நிலையத்தில் சில குறைகள் உள்ளன. மேலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து உள்ளனா்.
அதன்படி, கூடுதலாக மேற்கூரை அமைப்பது, உணவக வசதி, காவல் நிலையம், ரயில் பெட்டிகள் நிற்பதற்கான இடத்தை அடையாளம் காட்டும் டிஜிட்டல் போா்டு அமைத்திடவும், கூடுதல் கட்டட வசதி, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய ரயில்வே அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் செயல்பாட்டில் இல்லை.
நாகா்கோவில் ரயில் நிலையம் தற்போது திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ளது. இதனை மதுரை கோட்டத்துடன் இணைக்கவும் அல்லது தனி கோட்டமாக கொண்டுவருவதற்கு ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம். திருவனந்தபுரம்- நாகா்கோவில் இரட்டை ரயில் பாதை பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை துரிதப்படுத்தவும் வலியுறுத்துவேன் என்றாா்அவா்.
ஆய்வின் போது, காங்கிரஸ் விவசாய அணி மாவட்டத் தலைவா் சிவபிரபு, நிா்வாகிகள் செல்வன், செல்வகுமாா், ஆா்.எஸ். ராஜன் மற்றும் ரயில் பயணிகள் சங்க நிா்வாகிள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.