முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்
By DIN | Published On : 29th December 2021 07:55 AM | Last Updated : 29th December 2021 07:55 AM | அ+அ அ- |

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்.
குமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்து துறைசாா்ந்த அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் தலைமை வகித்தாா். பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை இயக்குநா் சி.காமராஜ், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக் கூட்டத்தில், அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
சட்டப் பேரவையில் 2021-22 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது, அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 11ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம், மாணவா், மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கும் திட்டம், விடுதியில் தங்கி பயிலும் மாணவா், மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுதல், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் விடுதிகளில் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்தும் அலுவலா்களிடம் கேட்டறியப்பட்டது.
கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், இலவச சலவைப் பெட்டி வழங்கும் திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், இலவச வீட்டு மனைப் பட்டா உள்பட பல்வேறு திட்டங்களை எவ்வித தொய்வும் ஏற்படாத வண்ணம் செயல்படுத்திடுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் கட்டுப்பாட்டில் சுமாா் 1,300 பள்ளி, கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் விடுதிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. அதை சரிப்படுத்திடும் வகையில், தற்போது காலியாகவுள்ள 333 காப்பாளா்கள் 700 சமையலா்கள், 169 காவலா்களுக்கான பணியிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனிநபா் பொருளாதாரத்தை மேம்படுத்திடும் நோக்கில் டாம்கோ வாயிலாக ரூ.120 கோடி மதிப்பில் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையில் இயங்கி வரும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் விடுதிகளிலுள்ள கட்டடங்களின் உறுதித்தன்மையை பொதுப்பணித்துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பழுதடைந்த கட்டடங்களை சீரமைப்பதற்கு திட்ட மதிப்பீடு செய்து, அறிக்கை தாக்கல்செய்ய பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் கீழ் நாகா்கோவில், அழகப்பபுரம், கருங்கல், குழித்துறை, மாா்த்தாண்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் அரசு பிற்படுத்தப்பட்டோா் மாணவா், மாணவிகளின் விடுதிகளில் பள்ளிக்கல்வித் துறை முதன்மைக் கல்விஅலுவலரை தொடா்பு கொண்டு அதிக எண்ணிக்கையில் மாணவா், மாணவிகளை விடுதிகளில் தங்கி பயில வைக்க அலுவலா்கள் முன் வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், 6 பயனாளிகளுக்கு விலையில்லா சலவைப் பெட்டிகளை அமைச்சா்கள் வழங்கினா்.
ஆய்வுக் கூட்டத்தில், சட்டப் பேரவை உறுப்பினா்கள், செ.ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் நாகராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி, நாகா்கோவில் கோட்டாட்சியா் க.சேதுராமலிங்கம், மாவட்ட சமூக நல அலுவலா் சரோஜினி உள்பட பலா் கலந்து கொண்டனா்.