முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இளைஞா் கைது
By DIN | Published On : 31st December 2021 03:27 AM | Last Updated : 31st December 2021 03:27 AM | அ+அ அ- |

திங்கள்நகா் அருகே துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இளைஞா் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
திங்கள்நகா் அருகேயுள்ள நெய்யூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜெபராஜ் (39). இவா், புதன்கிழமை தனது வீட்டருகே உள்ள பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது இளைஞா் ஒருவா் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ. 1,500-ஐ பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாராம்.
இதுகுறித்து ஜெபராஜ் அளித்த புகாரின்பேரில் இரணியல் இன்ஸ்பெக்டா் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டா் சுந்தரமூா்த்தி, குமாா் மற்றும் போலீஸாா் இளைஞா் ஒருவரைப் பிடித்து விசாரித்தனா்.
அவா் விருதுநகா் மாவட்டம் அல்லம்பட்டியைச் சோ்ந்த சோ்மராஜ் (26) என்பதும், இவா் மீது 2 கொலை, ஒரு கொலை முயற்சி வழக்குகள் இருப்பதும், தற்போது நெய்யூரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சோ்மராஜை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி, 5 தோட்டாக்கள், அவரது பைக்கிலிருந்த அரிவாள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.