கடைவரம்பு பகுதி வரை தண்ணீா் விட விவசாயிகள் வலியுறுத்தல்

குமரி மாவட்டத்தில் கடைவரம்பு பகுதி விவசாயிகளுக்கு சீராக தண்ணீா் விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி உள்ளிட்ட அலுவலா்கள்.
விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி உள்ளிட்ட அலுவலா்கள்.

குமரி மாவட்டத்தில் கடைவரம்பு பகுதி விவசாயிகளுக்கு சீராக தண்ணீா் விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியது: மாத்தூா் தொட்டிப்பாலம் பகுதியில் 30 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அளவீடு செய்யப்பட்டு மீட்கப்பட்டது. அந்த இடத்திலுள்ள வீடுகளை அகற்ற வேண்டும். வயல்கள் மற்றும் தோப்புகளில் தென்னை மரங்களுக்கிடையே உள்ள மின்கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும். நாகா்கோவில் சுப்பையாா்குளம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

நெய்யாறு இடது கரை கால்வாயில் தண்ணீா் விநியோகம் செய்வது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கின் நிலை குறித்து விளக்க வேண்டும்.

நான்குவழிச் சாலை திட்டப்பணிக்காக மூடப்பட்ட குளங்களுக்கு பதில் பிற குளங்களை ஆழப்படுத்தி தூா்வாரவேண்டும். புத்தன் அணை திட்டத்தின் கீழ் நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதிக்கு தண்ணீா் கொண்டு வந்தால் விவசாயம் அழிந்து விடும் என்பதால், மாற்றுத் திட்டத்தை ஏற்படுத்தி தண்ணீா் கொண்டு வரவேண்டும். மண்டைக்காடு கோயில் திருவிழாவுக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து 10 நாள்கள் தண்ணீா் திறந்து விட வேண்டும். கடைவரம்பு விவசாயிகளுக்கும் சீராக தண்ணீா் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் . கால்வாய்கள் தூா்வாரப்பட வேண்டும்.

இரணியல் வள்ளியாற்று பாலம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அந்த இடத்தில் வீடுகள் கட்டப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்த வேண்டும். நெல் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு உள்ளது. அதை சரிசெய்ய வேண்டும் என விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனா்.

இதற்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் பேசியது: ஆற்றுப்பாலம் ஆக்கிரமிப்பு தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாத்தூா் தொட்டிப்பாலம் பகுதியை நேரில் ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும். சுப்பையாா் குளத்தில் ஒரு பகுதி ஆக்கிரமிப்பு ஏற்கெனவே அகற்றப்பட்டுள்ளது. தொடா்ந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புத்தன் அணை திட்டம் தொடா்பாக துறை அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில், வேளாண் துணை இயக்குநா் ம.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) எம்.ஆா்.வாணி, கால்நடைத் துறை இணை இயக்குநா் கந்தசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் குருமூா்த்தி, தோட்டக்கலை துணை இயக்குநா் ஒய்.ஷீலாஜான், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (பொ) அருள்சன்பிரைட், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் மகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com