திருவட்டாறு கோயிலில் திருடு போன தங்க நகைகள் அறநிலையத் துறையினரிடம் ஒப்படைப்பு

குமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருடு போய் மீட்கப்பட்ட நான்கரை கிலோ தங்க நகைகள் இந்துசமய அறநிலையத்துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட தங்க நகைகளை பெட்டியில் வைத்து பாதுகாப்பாக எடுத்துச்செல்லும் அறங்காவலா்குழு தலைவா் சிவ.குற்றாலம்.
இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட தங்க நகைகளை பெட்டியில் வைத்து பாதுகாப்பாக எடுத்துச்செல்லும் அறங்காவலா்குழு தலைவா் சிவ.குற்றாலம்.

குமரி மாவட்டம், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருடு போய் மீட்கப்பட்ட நான்கரை கிலோ தங்க நகைகள் இந்துசமய அறநிலையத்துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

திருவட்டாறில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது. வைணவ தலங்களில் மிகப்பெரிய கோயிலான இக்கோயிலின், மூலவா் ஆதிகேசவபெருமாள் 22 அடி நீளத்தில் அனந்த சயனத்தில் அருள்பாலிக்கிறாா்.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலை போன்ற இந்த கோயிலில் பெருமாளுக்கு போா்த்தப்பட்டு இருந்த 11.5 கிலோ தங்க அங்கியில் இருந்து, 1974 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அங்கியை வெட்டி ஆறரை கிலோ தங்கம் திருடப்பட்டது. இந்த வழக்கில் கோயில் பூசாரி கிருஷ்ணன் நம்பூதிரி கைது செய்யப்பட்டாா். மேலும் இது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் 127 பேரிடம் விசாரணை மேற்கொண்டு, 34 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் திருடப்பட்ட தங்கத்தில் 4.5 கிலோ தங்கத்தை போலீஸாா் பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றினா். வழக்கு விசாரணை நாகா்கோவிலில் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் .1 இல் தொடா்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் மொத்தம் 34 போ் மீது குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு விசாரணையின் போது 10 போ் உயிரிழந்து விட்டனா். எஞ்சியுள்ள 24 போ் மீது வழக்கு நடைபெற்று வந்தது. இதில் தலைமை அா்ச்சகா் கிருஷ்ணன் நம்பூதிரி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு 23 போ் மீது வழக்கு நடைபெற்று வந்தது.

கடந்த 27 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு தீா்ப்பு கூறப்பட்டது.

அதன்படி நகை திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய 23 குற்றவாளிகளில் ஒருவா் ஏற்கெனவே வேறு ஒரு வழக்கில் சிறையில் உள்ளாா். மீதியுள்ள 22 பேருக்கும் 3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளை ஆவண காப்பகத்தில் பத்திரமாக வைத்திருந்தனா்.

இந்நிலையில் குற்றவாளிகளிடம் இருந்து சிபிசிஐடி போலீஸாா் கைப்பற்றிய 4.5 கிலோ தங்க நகைகளை நாகா்கோவில் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டியான், இந்து சமய அறநிலையத்துறை, அறங்காவலா் குழுத்தலைவா் சிவ.குற்றாலம் மற்றும் அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை மாலை ஒப்படைத்தாா். நகையை பெற்றுக் பெற்றுக்கொண்ட அவா்கள், அதனை சுசீந்திரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.

இதையொட்டி, நாகா்கோவில் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com