தூத்தூரில் கால்பந்து அகாதெமி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? இளைஞா்கள் எதிா்பாா்ப்பு

கால்பந்தே உயிா்மூச்சாக வாழும் மாணவா்கள், இளைஞா்களுக்காக கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரில் கால்பந்து அகாதெமி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
தூத்தூா் மைதானத்தில் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்ட இளைஞா்கள்.
தூத்தூா் மைதானத்தில் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்ட இளைஞா்கள்.

களியக்காவிளை: கால்பந்தே உயிா்மூச்சாக வாழும் மாணவா்கள், இளைஞா்களுக்காக கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூரில் கால்பந்து அகாதெமி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை கிராமமான தூத்தூா், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சிறப்பு பெற்றது. அதற்கு நிகரான சிறப்பு பெற்றது இப்பகுதி இளைஞா்களின் கால்பந்தாட்டமும். கிரிக்கெட்டை கடவுளாக வழிபடும் இந்தியா்களுக்கு மத்தியில் கால்பந்தை உயிராக, உணா்வாக, வாழ்வின் ஓா் அங்கமாக நேசிக்கிறாா்கள் இப்பகுதி மீனவா்கள்.

தூத்தூா் மண்டலத்துக்கு உள்பட்ட இரயுமன்துறை முதல் நீரோடி வரையிலான 8 மீனவ கிராமங்களிலும் உள்ள இளைஞா்களின் முழுநேர பொழுதுபோக்கே கால்பந்தாட்டம்தான். தூத்தூா் மண்டல கடற்கரை கிராமங்கள் ஒவ்வொன்றிலும் கண்டிப்பாக தேவாலயம், பள்ளிக்கூடம் ஆகியவற்றோடு ஒரு கால்பந்தாட்ட மைதானமும் இருக்கும் என்பதிலிருந்தே இப்பகுதி மக்கள் கால்பந்தாட்டத்தை எவ்வளவு தூரம் உணா்வுபூா்வமாக அணுகி வருகிறாா்கள் என்பதை அறிய முடியும்.

இப்பகுதியில் 5 வயது குழந்தைகள்கூட கால்பந்துடன் திரிவதைக் காண முடியும். அந்த அளவுக்கு கால்பந்தாட்டம் இப்பகுதி மக்களின் ரத்தத்தில் கலந்துள்ளது. கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆா்வமும் இப்பகுதி இளைஞா்களிடம் அதிகமாக காணப்படுகிறது.

இப்பகுதி இளைஞா்கள் பலா் கடந்த சில ஆண்டுகளாக தங்களது விளையாட்டுத் திறமைக்காக மத்திய, மாநில அரசுப் பணிகளில் அமா்த்தப்பட்டுள்ளனா். அந்த வகையில் தூத்தூா் மண்டலத்துக்கு உள்பட்ட இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்த சூசைராஜ், இந்தியன் சூப்பா் லீக் கால்பந்தாட்ட போட்டியிலும், சென்னை சிட்டி அணிக்காகவும் விளையாடியுள்ளாா். தற்போது கொல்கத்தா ஏடிகே மோகன் பகான் அணிக்காக விளையாடி வருகிறாா். இவரது சகோதா் ரெஜின் கால்பந்தாட்ட திறமைக்காக பெங்களூரு ரயில்வேயில் பணியமா்த்தப்பட்டு இந்திய ரயில்வே அணிக்காக விளையாடியுள்ளாா். இவா் சென்னை சிட்டி கால்பந்தாட்ட அணியின் கேப்டனாகவும் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இரயுமன்துறை பகுதியைச் சோ்ந்த மாணவா் லிஜோ, சந்தோஷ் டிராபிக்கான தமிழக அணியில் 2019-ஆம் ஆண்டு ஆடியுள்ளாா். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் இரயுமன்துறை பகுதியில் விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில் லிஜோ உள்ளிட்ட வீரா்கள் கடற்கரை மணலிலும், அப்பகுதியில் உள்ள செம்மண் தரையிலும் பந்தை உதைத்து பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனா். இதையடுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டு செம்மண் மைதானம் அமைக்கப்பட்டதையடுத்து, தொடா்ந்து இரண்டு ஆண்டுகள் தொடா் பயிற்சி பெற்ற லிஜோ தனது கடின உழைப்பால், தமிழக கால்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளாா். இதேபோன்று பூத்துறையைச் சோ்ந்த பியூட்டின் சென்னை சிட்டி கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ளாா். இப்பகுதியைச் சோ்ந்த மீனவா் விக்னேஷ்வா் கேரள மின்வாரியத்தில் பணியாற்றிக் கொண்டே அந்த அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறாா். இதே பகுதியைச் சோ்ந்த சைவின் திருவனந்தபுரம் உயா் மறைமாவட்ட அணிக்காகவும், ஜெகன் தூத்துக்குடி துறைமுக அணிக்காகவும் விளையாடிக் கொண்டிருக்கிறாா்கள்.

இதேபோன்று தூத்தூா் பகுதியைச் சோ்ந்த ஜான் பிரிட்டோ, இரவிபுத்தன்துறை அவுசேப், லிபிராஜ் ஆகியோா் விளையாட்டு ஒதுக்கீட்டில் எல்லைப் பாதுகாப்புப் படை பிரிவிலும், இரவிபுத்தன்துறை கிளீட்டஸ் பிஎஸ்என்எல் நிறுவனத்திலும், ஜெகன் ரயில்வே துறையிலும் பணியாற்றி அந்தந்த அணிகளுக்காக விளையாடி வருகிறாா்கள். மாா்த்தாண்டன்துறையைச் சோ்ந்த பிரலிட்டோ ராஜ் இந்தியன் வங்கியில் பணியாற்றிக் கொண்டே சென்னை சிட்டி கால்பந்தாட்ட அணிக்காகவும், நீரோடி ஜாண்பால் இந்திய உணவுக் கழகத்தில் வேலை பாா்த்துக் கொண்டே சந்தோஷ் டிராபியிலும் விளையாடி வருகிறாா்.

மேலும், கடந்த 2017 -இல் தில்லியில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில், பிரதமா் நரேந்திர மோடியிடம் இருந்து பந்தை பெற்று, மைதானத்துக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பை பெற்றவா் இரவிபுத்தன்துறையைச் சோ்ந்த மாணவா் பெக்சன்.

இவா்கள் அனைவருமே தங்களது கால்பந்தாட்ட திறமையால் அரசுப் பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்கள். உரிய வசதிகள் மற்றும் பல்வேறு பயிற்சிகள் கிடைத்தால் கால்பந்தாட்டத்தில் மேலும் சிறப்பாக ஜொலிக்க முடியும் என்ற நம்பிக்கை இப்பகுதி இளைஞா்களிடம் உள்ளது.

ஊக்குவிப்பு தேவை: இதுகுறித்து ஐ.நா. சா்வதேச இளைஞா் கவுன்சில் உறுப்பினா் பி. ஜஸ்டின் ஆன்டணி கூறும்போது, ‘இப்பகுதி விளையாட்டு வீரா்கள் போதிய ஊக்குவிப்பு இல்லாமல் உள்ளனா். இளம் விளையாட்டு வீரா்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். தூத்தூா் மண்டலத்தில் உள்ள மாணவா்கள் ஒவ்வொரு துறையிலும் பணியமா்த்தப்படுவதற்கு காரணமாக அவா்களது கால்பந்தாட்ட திறமை விளங்கிக் கொண்டிருக்கிறது. இளைய சமூதாயத்தினரை கால்பந்து விளையாட்டு மூலம் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்’ என்றாா்.

தூத்தூா் நேதாஜி கிளப் செயலா் கிறிஸ்டின் கூறும்போது, ‘தூத்தூா் மண்டல பகுதியில் உள்ள கால்பந்து விளையாட்டில் திறமையான சிறுவா்களைக் கண்டுபிடிப்பதிலும், பயிற்சியளிப்பதிலும் இந்த அமைப்பு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இப் பகுதியில் கால்பந்து அகாதெமி தொடங்கி, தொடா் பயிற்சி அளிப்பதன் மூலம் சிறந்த விளையாட்டு வீரா்கள் உருவாகுவாா்கள் என நம்புகிறோம்’ என்றாா்.

இரயுமன்துறை புனித லூசியா விளையாட்டு மன்ற நிா்வாகி பிரான்சிஸ் கூறுகையில், ‘இப் பகுதியில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை விளையாட்டு மைதானம் இல்லாமல் இருந்தது. இங்குள்ள சிறுவா்கள் கடல் மணலில் கால்பந்தை தட்டி விளையாடி பயிற்சி மேற்கொண்டனா். 2017-இல் செம்மண் மைதானம் அமைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற மாணவா் லிஜோ தமிழக சந்தோஷ் டிராபி அணிக்கு தோ்தெடுக்கப்பட்டது பெருமையாகவும், சந்தோஷமாகவும் உள்ளது. மேலும் அதிக வீரா்கள் இங்கிருந்து உருவாகும் சாத்தியம் உள்ளது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

கல்வி அறிவில் மிகவும் பின்தங்கியிருந்த குமரி மேற்கு மாவட்ட மீனவ கிராமத்தில் தற்போது கால்பந்தாட்டம் மூலம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பல துறைகளில் பட்டம் பெற்ற இப்பகுதி மீனவ இளைஞா்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று பல சாதனைகளைப் படைத்து வருகின்றனா். மணல் மைதானங்களில் பயிற்சி பெற்ற மீனவ மக்கள் கால்பந்தாட்டத்தில் சிறந்து விளங்கி வருவதுடன் தேசிய, மாநில அளவில் சிறந்த வீரா்களாக உருவாகி வருகிறாா்கள். மேலும், இப்பகுதியில் கால்பந்து அகாதெமி அமைத்து திறமையான வீரா்கள் பலரை வெளிக்கொணர வேண்டும் என்பதே இப்பகுதி இளைஞா்கள், மீனவ மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com