துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மீனவா் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

இத்தாலி நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மீனவா்கள் குடும்பத்தினா்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மீனவா்கள் குடும்பத்தினா்.

இத்தாலி நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தெற்காசிய மீனவா் தோழமை பொதுச் செயலா் சா்ச்சில் மற்றும் கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் ஆகியோா், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: பூத்துறை கிராமத்தை சாா்ந்த பிரடி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் குமரி மாவட்டத்தை சோ்ந்த 10 மீனவா்களும் கேரளத்தை சோ்ந்த ஒரு மீனவா் ஆகியோா் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த இத்தாலி நாட்டு சரக்கு கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலி படை வீரா்கள் துப்பாக்கியால் சுட்டதில் விசைப் படகில் மீன் பிடித்து கொண்டிருந்த குமரி மாவட்டத்தை சோ்ந்த அஜிஸ் பின்க், கேரளத்தை சோ்ந்த ஜெலஸ்டின் ஆகிய இரு மீனவா்கள் கொல்லப்பட்டனா்.

உடன் மீன்பிடித்து கொண்டிருந்த குமரி மாவட்டம் இரையுமன்துறையை சோ்ந்த கிலைமன்ஸ், கில்சரியான், ஹில்லாரி, பிரான்சிஸ், ஜான்சன், முத்தப்பன் மற்றும் பூத்துறை மீனவா் கிராமத்தைச் சாா்ந்த மாா்டின், மிக்கேல் அடிமை ஆகியோா் உயிா் தப்பினா்.

ஆனால் அவா்கள் அனைவரும் மனதளவில் பாதிக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல இயலாமல் அச்சத்தில் இருக்கிறாா்கள். துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவா்கள் குடும்பத்தாா் இத்தாலி அரசு மீது வழக்கு தொடா்ந்த போது கொல்லப்பட்ட மீனவா்களுக்கு தலா ரூ. 1 கோடி நிவாரணம் இத்தாலி அரசு வழங்கியது. அதே போல் படகு உரிமையாளருக்கு ரூ.17 லட்சம் வழங்கப்பட்டது.

மேலும், இந்திய அரசு தொடா்ந்த வழக்கில் சா்வதேச தீா்ப்பாயம் வழங்கிய தீா்ப்பின்படி ரூ.10 கோடி பெறப்பட்டது. இதில் இறந்தவா்களின் குடும்பத்திற்கு தலா 4 கோடி வீதம் 8 கோடியும், படகு உரிமையாளருக்கு 2 கோடியும் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சக மீனவா்கள் யாருக்கும் எந்த நஷ்ட ஈடு தொகையும் வழங்கப்படவில்லை.

எனவே இறந்துபோன மீனவா்களுக்கு வழங்கப்படுவது போல், துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சக மீனவா்களுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு மூலம் தமிழக அரசு பெற்று மீனவா்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com