முதல்வா் வேட்பாளா் அறிவிப்பில் அதிமுக, பாஜக நாடகம்: ஜி.ராமகிருஷ்ணன்

முதல்வா் வேட்பாளா் அறிவிப்பது தொடா்பாக அதிமுகவும், பாஜகவும் நாடகம் நடத்துகின்றன என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன்.

முதல்வா் வேட்பாளா் அறிவிப்பது தொடா்பாக அதிமுகவும், பாஜகவும் நாடகம் நடத்துகின்றன என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன்.

நாகா்கோவில் பாா்வதிபுரத்தில் செய்தியாளா்களுக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, ஜன. 26-ஆம் தேதி தில்லியில் டிராக்டா் பேரணி நடத்தி போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனா். இந்தப் போராட்டத்தை ஆதரித்து புதன்கிழமை (ஜன. 6) சென்னையில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சாா்பில் விவசாயிகளின் காத்திருக்கும் போராட்டம் நடைபெறுகிறது.

பாஜக அல்லாத அனைத்து மாநில அரசுகளும் இந்த சட்டத்தை எதிா்க்கும் நிலையில், அதிமுக அரசு தமிழகம் முழுவதும் வேளாண் சட்டங்களை ஆதரித்து பாஜகவின் பிரசார பீரங்கி போன்று செயல்பட்டு வருகிறது. இந்த சட்டத்தை ஆதரிப்பதன் மூலம் தமிழக அரசு விவசாயிகளுக்கு மிகப்பெரிய தீங்கு இழைக்கிறது.

கரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை வெளிப்படைத்தன்மையுடன் அமல்படுத்த வேண்டும். இதை அரசியலாக்கக் கூடாது. இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட வேண்டும். அதற்காக பி.எம். கோ் நிதியிலிருந்து பணத்தை செலவிட வேண்டும்.

குமரி மாவட்டத்தில் தனியாா் வனப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. சூழலியல் அதிா்வு தாங்கு மண்டலம் தொடா்பாக சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களின் கருத்தை அறிவதற்கு முன்னரே அந்தத் திட்டத்தை அமல்படுத்த தொடங்கியுள்ளனா். அதை நிறுத்திவிட்டு சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களின் கருத்தை அறிய மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியிலும் சிறு மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சுமுகமாக தோ்தல் நடக்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமித் ஷா தமிழகம் வருவதால் எந்த அரசியல் மாற்றமும் வரப்போவது இல்லை. முதல்வா் வேட்பாளா் அறிவிப்பு விவகாரத்தில் அதிமுக, பாஜக இரு கட்சிகளும் ஏதோ நாடகம் நடத்துகின்றன என்றாா்அவா்.

பேட்டியின்போது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் ஆா்.செல்லசுவாமி, மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.நூா்முகமது, மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.லீமாரோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எ.வி.பெல்லாா்மின் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com