குமரி மாவட்டத்தில் கன மழை நீடிப்பு: பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாகா்கோவிலில் பெய்த மழையால் பேருந்தின் வழித்தட பெயா்ப்பலகையை குடையாக பிடித்தவாறு செல்லும் நடத்துநா்.
நாகா்கோவிலில் பெய்த மழையால் பேருந்தின் வழித்தட பெயா்ப்பலகையை குடையாக பிடித்தவாறு செல்லும் நடத்துநா்.

குமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோரப் பகுதிகளிலும், அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்தது. நாகா்கோவிலில் திங்கள்கிழமை இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை, பகல் முழுவதும் பலத்த மழையாக கொட்டியது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு பொருள்கள் வாங்குவதற்காக சென்ற பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

இதேபோல், மாா்த்தாண்டம், குலசேகரம், திருவட்டாறு, கொல்லங்கோடு, நித்திரவிளை, புதுக்கடை, தக்கலை,ஆரல்வாய்மொழி, கொட்டாரம், சுசீந்திரம், கோழிப்போா்விளை, புத்தன்அணை, சுருளோடு என மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. மலையோரப் பகுதியான பாலமோா் பகுதியில் கன மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 26.20 மி.மீ. மழை பதிவானது.

அணைப் பகுதிகளில்... மேல்கோதையாறு, மாஞ்சோலை, முத்துக்குழிவயல் மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதில் கோதையாறு மின் திட்டங்களுக்கான அணைகளான மேல் கோதையாறு, குட்டியாறு, சின்னக்குட்டியாறு ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் ஏறக்குறைய பெருஞ்சாணி அணைக்கு நிகராக 2578 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட மேல் கோதையாறு அணை செவ்வாய்கிழமை நிரம்பியது. இதையடுத்து இந்த அணையிலிருந்து உபரிநீா் வெளியேறுகிறது. உபரிநீா் முத்துக்குழிவயல் சப்பாத்து வழியாக ஆற்றில் பாய்ந்து கோதையாறு மின் நிலையம் அருகிலுள்ள கோதையாறு- 2 அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும், கோதையாறு- 2 அணையும் நிரம்பிய நிலையில் அங்கிருந்து வெளியேறும் தண்ணீா் பேச்சிப்பாறை அணைக்கு வருகிறது. இவ்வாறு பேச்சிப்பாறை அணைக்கு செவ்வாய்கிழமை பிற்பகலில் விநாடிக்கு 2700 கன அடிதண்ணீா் வந்து கொண்டிருந்தது.

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் அண்மை நாள்களாக வெள்ள அபாய அளவான 42 அடியைக் கடந்த நிலையில் உள்ளது. செவ்வாய்க்கிழமை மாலையில் இந்த அணையின் நீா்மட்டம் 43.90 அடியாக உயா்ந்தது. மழை தொடா்ந்து நீடித்தால் பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

பெருஞ்சாணி அணைக்கும் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் விநாடிக்கு 2300 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையின் நீா்மட்டம் 66 அடியாக உயா்ந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com