அகஸ்தீசுவரத்தில் 251 பானைகளில் பொங்கல் விழா
By DIN | Published On : 16th January 2021 12:52 AM | Last Updated : 16th January 2021 12:52 AM | அ+அ அ- |

தேவி முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வில் பங்கேற்றோா்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் தேவி முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் 251 பானைகளில் பொங்கலிட்ட நிகழ்ச்சியில் வடமாநில சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா்.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அகஸ்தீசுவரம் அருள்மிகு தேவி முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 251 பானைகளில் பொதுமக்கள் பொங்கலிட்டு வழிபட்டனா். இதில் ஏராளமான புதுமணத் தம்பதிகளும் கலந்து கொண்டனா்.
பானையில் பொங்கல் பொங்கிவரும் நேரத்தில் பொங்கலோ, பொங்கல் என்று குலவையிட்டு கரும்பு, கிழங்கு வகைகள், பழம் ஆகியவற்றை படைத்து சூரிய பகவானை வழிபட்டனா். நிகழ்ச்சியில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை சாா்பில் வடமாநில சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கலந்துகொண்டனா். அவா்கள் பொங்கலை ருசித்து உண்டனா்.
பொங்கல் விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விழாவை பாா்க்கும்போது நாங்கள்
உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் உணா்கிறோம் என வடமாநில சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனா். விழாவையொட்டி சிலம்பாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகள்
நடைபெற்றன. இதில், மாவட்ட சுற்றுலா அலுவலா் நெல்சன், அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன், பேராசிரியா் கருணாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.