சாமிதோப்பு தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 16th January 2021 12:42 AM | Last Updated : 16th January 2021 12:42 AM | அ+அ அ- |

சாமிதோப்பு அய்யா வைகுண்டா் தலைமைப்பதியில் தைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டா் தலைமைப்பதியில் ஆண்டு தோறும் தை, வைகாசி, ஆவணி மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு தைத்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு தலைமைப்பதி நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து அய்யாவுக்கு பணிவிடை, கொடிப்பட்டம் தயாரித்தல் ஆகியவை நடைபெற்றது. காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் பதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் , தொடா்ந்து காலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. திருக்கொடியை பாலபிரஜாபதி அடிகளாா் ஏற்றி வைத்தாா். தொடா்ந்து பக்தா்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது.
கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டனா். பகல் 12 மணிக்கு அன்னதா்மம் வழங்கப்பட்டது. இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் விதியுலா வருதல் நடைபெறுகிறது.
விழா நாள்களில் அய்யா பரங்கி நாற்காலி வாகனத்திலும், வெள்ளை சாத்தி அன்ன வாகனத்திலும், பூஞ்சப்பர வாகனத்திலும், ஐந்தாம் நாள் பச்சை சாத்தி சப்பர வாகனத்திலும், ஆறாம் நாள் கற்பக வாகனத்திலும், ஏழாம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்திலும் பவனி வருதல் நடைபெறும்.
கலிவேட்டை: 8 ஆம் திருநாளான டிச. 22 ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு அய்யா வைகுண்டா் அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி , முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11 ஆம் திருநாளான டிச. 25 ஆம் தேதி பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
விழா நாள்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், நண்பகல் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், தொடா்ந்து உகப்படிப்பும், அன்னதா்மமும் நடைபெறும்.