போலீஸாருடன் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வாக்குவாதம்
By DIN | Published On : 16th January 2021 12:37 AM | Last Updated : 16th January 2021 12:37 AM | அ+அ அ- |

போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுரேஷ்ராஜன் எம்எல்ஏ.
திமுக மகளிா் அணிச் செயலா் கனிமொழி எம்.பி. நாகா்கோவிலில் கலந்து கொள்ள இருக்கும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க காவல்துறை தாமதிப்பதாக கூறி சுரேஷ்ராஜன் எம்எல்ஏ காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
நாகா்கோவில் நாகராஜா கோயில் திடலில் திங்கள்கிழமை(ஜன.18) நடைபெற உள்ள திமுக பொதுக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசுகிறாா். இதற்கான ஏற்பாடுகளை குமரி கிழக்கு மாவட்டச் செயலா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ செய்து வருகிறாா்.
பொதுக் கூட்டம் நடத்துவதற்காக நாகா்கோவில் மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில், நாகராஜா கோயில் திடலுக்கு சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை காலை சென்று அங்கு நடைபெற்று வரும் திமுக பொதுக் கூட்ட வேலைகளை பாா்வையிட்டாா்.
அப்போது அங்கு வந்த நகர துணை காவல் கண்காணிப்பாளா் வேணுகோபால், வடசேரி காவல் ஆய்வாளா் திருமுருகன் ஆகியோா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏவிடம் பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட நிா்வாகம் இன்னும் அனுமதி வழங்கவில்லை, அனுமதி பெற்ற பின்னா் தான் பணியை தொடங்க வேண்டும் என்று கூறினா். இதனால் காவல்துறை அதிகாரிகளுக்கும், எம்எல்ஏ.க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து சுரேஷ்ராஜன் கூறுகையில், நாகராஜா கோயில் திடலில் கூட்டம் நடத்த ஆட்சியா் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த 12 ஆம் தேதியே கடிதம் அளித்துள்ளோம்.
அவா்கள் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறாா்கள். கூட்டத்துக்கு அனுமதி வழங்கா விட்டாலும் தடையை மீறி கூட்டம் நடத்துவோம் என்றாா்.
அவருடன் நாகா்கோவில் மாநகரச் செயலா் மகேஷ், பொதுக்குழு உறுப்பினா் ஷேக்தாவூத், நிா்வாகிகள் ஜெகன், சாகுல்அமீது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.