முஞ்சிறை ஒன்றியத்தில் ரூ. 5.13 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 28th January 2021 04:17 AM | Last Updated : 28th January 2021 04:17 AM | அ+அ அ- |

முஞ்சிறை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணியை ஆய்வு செய்தாா் ஆட்சியா் மா.அரவிந்த்.
கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகளை புதன்கிழமை ஆட்சியா் மா. அரவிந்த் ஆய்வு செய்தாா்.
முன்சிறை ஒன்றியத்துக்கு வருகை தந்த ஆட்சியா் மா. அரவிந்த், ரூ.3.90 கோடியில் கட்டப்பட்டு வரும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமானப் பணியை பாா்வையியிட்டாா். பின்னா், பாா்த்திவபுரம் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலையரங்கு, ரூ.9.18 லட்சம் மதிப்பில் நடைக்காவு ஊராட்சியில் நடைக்காவு கொட்டைக்காடு சாலை மேம்பாட்டு பணியை ஆய்வு மேற்கொண்ட அவா், பணியை விரைவாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டாா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ், ரூ.28.75 லட்சம் மதிப்பில் புல்லூா்கோணம் சாலையில், நெய்யாறு இடதுகரை கால்வாயின் குறுக்கே சிறுபாலம் கட்டும் பணி, ஊரக சாலைகள் மேம்பாடு திட்டத்தின்கீழ், ரூ. 80 லட்சம் மதிப்பில் கோழிவிளை தோட்டத்துவிளாகம் சாலை கான்கீரிட் தளம் அமைக்கும் பணிகள், மங்காடு, முஞ்சிறை, வாவறை, நடைக்காவு, மெதுகும்மல் குளப்புறம், விளாத்துறை ஆகிய 7 ஊராட்சிகளில் 42 கிராமங்களில் மேற்கொள்ளப் பட்டுள்ள பணிகள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டாா்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜல் ஜீவன் திட்டம் குறித்து ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா், ஊராட்சித் தலைவா்கள் கலந்துகொண்ட ஆய்வு கூட்டத்தில் ஆட்சியா் பங்கேற்றாா். ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளா் சங்கா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ம.விஜயன், ப.லதா, முஞ்சிறை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ராஜேஸ்வரி, உதவி பொறியாளா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.