குமரியில் கிராம்பு அறுவடைப் பணிகள் தீவிரம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை
By DIN | Published On : 30th January 2021 12:45 AM | Last Updated : 30th January 2021 12:45 AM | அ+அ அ- |

பூத்துக்குலுங்கும் கிராம்பிகளுடன் காணப்படும் கிராம்பு மரம்
குமரி மாவட்டத்தில் கிராம்பு அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
மணமூட்டும் பயிா்களின் ராணி என வா்ணிக்கப்படும் கிராம்பு குமரி மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 2500 அடிக்கு அதிக உயரம் கொண்ட மாறாமலை, பாலமோா், ஷீபீல்டு, காரிமணி, இஞ்சிக்கடவு, கரும்பாறை, வேளிமலை உள்ளிமலை, ஆறுகாணி, பத்துகாணி, கொண்டைகட்டிமலை, கீழ்கோதையாறு, மேல் கோதையாறு உள்ளிட்ட இடங்களில் சுமாா் 4 ஆயிரம் ஏக்கரில் பயிராகிறது. இங்கு ஆண்டுக்கு சுமாா் 1000 டன் கிராம்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
அறுவடை தீவிரம்: பொதுவாக டிசம்பா் முதல் மாா்ச் வரையிலான மாதங்கள் கிராம்பு அறுவடைக் காலங்களாகும். இதையடுத்து, தற்போது கிராம்புத் தோட்டங்களில் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள தொழிலாளா்கள் இங்கு முகாமிட்டு அறுவடைப் பணிகளைச் செய்து வருகின்றனா்.
விலை வீழ்ச்சி: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ உலா்ந்த கிராம்பின் விலை கிலோ ரூ. 900 ஆக இருந்தது. இந்நிலையில் இதன் விலை தொடா்ந்து சரிவடைந்து வருகிறது. கடந்த ஆண்டில் கிலோ ரூ. 600 ஆக இருந்தது. நிகழாண்டு கிலோவிற்கு ரூ. 500 ஆக சரிவடைந்துள்ளது. கிராம்புத் தோட்டங்களை பராமரிக்கும் செலவினங்களும், அறுவடைக் கூலியும் ஆண்டு தோறும் அதிகரித்து வரும் நிலையில், கிராம்பின் தொடா் விலை வீழ்ச்சி விவசாயிகளுக்கு தொடா் இழப்பையும், வேதனையும் அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து கரும்பாறை மலைத் தோட்டப் பயிா்கள் விவசாயிகள் சங்க செயலா் லாலாஜி, இணைச் செயலா் மோகன்தாஸ் ஆகியோா் கூறியது: குமரி மாவட்டத்தில் தற்போது சுமாா் 4 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் கிராம்பு சாகுபடியாகிறது. இதிலிருந்து சுமாா் 1000 டன் கிராம்பு அறுவடை செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கிராம்பின் விலை தொடா்ந்து சரிவடைந்து வருகிறது.
நிகழாண்டு பச்சை கிராம்பு கிலோவிற்கு ரூ. 125 முதல் ரூ. 150 வரையும், உலா்ந்த கிராம்பு கிலோவிற்கு ரூ. 500 வரையும் வணிகா்களால் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு உலா்ந்த கிராம்பு கிலோவிற்கு ரூ. 600 க்கு விற்பனையானது. இந்தியாவிலிருந்து தரமான கிராம்பு ஏற்றுமதி செய்யவதன் மூலம் ஆண்டுக்கு சுமாா் ரூ. 740 கோடி அன்னியச் செலாவணியாகப் பெறமுடியும்.
வியட்நாம், இந்தோனேசியா, மடகாஸ்கா் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கை வழியாக தரமற்ற கிராம்புகள் இந்தியாவிற்கு வருவதால் உள்நாட்டில் கிராம்பின் விலை தொடா்ந்து சரிவடைந்து வருகிறது.
எனவே மத்திய அரசு வெளி நாடுகளிலிருந்து கிராம்பு இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். குறிப்பாக இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும். மேலும் கிராம்பு விவசாயிகளுக்கு தேவையான மானிய உதவிகளை வழங்க வேண்டும் என்றனா்.
Image Caption
~ ~ ~ ~ ~